சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மதுபான நிறுவனம் உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆவணங்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகிக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 2 ஆவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் அலுவலகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல சென்னை அடுத்த அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கிடங்கிலும், 6 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ர்ந்து 18 மணி நேரமாக சோதனை நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் கொள்முதல், விற்பனை குறித்த ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.