கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் தரமற்று இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான அருணாச்சலம் இன்பேக்ட் நிறுவனம் உள்பட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் நேற்று (மார்ச் 9) சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பாரிமுனையில் உள்ள அருணாச்சலம் இன்பேக்ட் நிறுவனம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. அதோடு லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனும், வி.சி.க. துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. ஒருநாள் முழுவதும் நீடித்த சோதனை இன்று (மார்ச் 10) காலை 4 மணியளவில் நிறைவடைந்தது. போயஸ் கார்டனில் நடைபெற்ற ஆதவ் அர்ஜூனா வீடு, கோட்டூர்புரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனத்தில் சோதனை இன்னும் நடைபெற்று வருகிறது. இவர்களின் வீட்டில் நேற்று முதல் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவர்களுக்கு சம்மன் கொடுத்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை முடிவில் அமலாக்கத் துறை இதுகுறித்து அறிக்கை வெளியிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜூனா, கடந்த ஜனவரி மாதம் தான் வி.சி.க-வில் இணைந்தார். அப்போது அவருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இவரது வீட்டில் ஏற்கெனவே அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“