சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனம் தொடர்பாக இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா, சி.பி.சி.ஐ.டி-யில் புகார் கொடுத்தார். ‘இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியன் வங்கியில் தவறான நிதிநிலை அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து 2 கட்டங்களாக ரூ.240 கோடி கடன் வாங்கி உள்ளது. சொன்ன காரணங்களுக்காக பயன்படுத்தாமல், இத்தொகையை வேறு காரணங்களுக்காக முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியன் வங்கிக்கு ரூ.312.13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீல்
இதையடுத்து, சரவணா ஸ்டோர்ஸ் பங்குதாரர்களான மறைந்த பல்லக்குத்துரை, பி.சுஜாதா மற்றும் ஒய்.பி.ஷிரவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெயர் குறிப்பிடப்படாத சில அரசு அதிகாரிகள் மீதும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான 2 கடைகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
முடக்கம்
இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், மறைந்த பல்லக்குத்துரை, பி.சுஜாதா மற்றும் ஒய்.பி.ஷிரவன் ஆகியோர் மீது அமலாக்கத் துறை கடந்த 2022 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில், சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான அசையா சொத்துகள் ரூ.234.75 கோடியை அமலாக்கத் துறை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி முடக்கி நடவடிக்கை எடுத்துது.
மாற்றம்
இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்டையின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்தியன் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட அசையாச் சொத்துக்கள் இப்போது இந்தியன் வங்கி வசம் வந்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில், "சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம், M/s சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) மற்றும் அதன் பங்குதாரர்கள் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக இந்தியன் வங்கிக்கு 235 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை மீட்டெடுப்பதற்கு வெற்றிகரமாக உதவியுள்ளது." என்று தெரிவித்துள்ளது.