செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) சம்மன் அனுப்பிய நிலையில், அமலாக்க இயக்குனரகம் (ED), ஆஜராவதை தவிர்த்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்ட தேதி மற்றும் நேரம் முடிந்த பிறகு நோட்டீஸ் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
திண்டுக்கல் மருத்துவரிடம் இருந்து ரூபாய் 20 லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அங்கித் திவாரி பணி செய்த அமலாக்கத்துறை மதுரை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முன்னதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்தநிலையில், "குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 160ன் கீழ் டிசம்பர் 23 தேதியிட்ட நோட்டீஸ், டிசம்பர் 26 ஆம் தேதி பிற்பகலில், காலை 11 மணிக்குத் திட்டமிடப்பட்ட நேரத்தைத் தாண்டிய பிறகு, அமலாக்கத்துறை மதுரை மண்டல அலுவலகத்தில் பெறப்பட்டது" என்று மதுரை துணை இயக்குநர் அதுல் குப்தா கூறினார்.
அமலாக்கத்துறை இயக்குனர் அதுல் குப்தா, தல்லாகுளம் ரேஞ்ச் காவல் உதவி ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், சி.ஆர்.பி.சி.,யின் பிரிவு 160 (சாட்சிகளின் வருகையைக் கோரும் காவல்துறை அதிகாரியின் அதிகாரம்) காரணங்களையோ அல்லது விசாரணையின் விஷயத்தையோ அமலாக்கத்துறைக்கு (ED) தெரிவிக்காமல் காவல்துறையின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் அதிகாரப்பூர்வ முத்திரை அல்லது சின்னம் இல்லை என்றும், நோட்டீஸ் அனுப்பிய நபரின் பெயர் அல்லது அடையாளத்தை கூட வெளியிடவில்லை என்றும் அதுல் குப்தா கூறினார்.
மேலும், டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்தும், பல அடையாளம் தெரியாத, அங்கீகரிக்கப்படாத நபர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து, அமலாக்கத்துறைக்குச் சொந்தமான முக்கியமான, ரகசிய பதிவுகளை அணுகி திருடியது குறித்தும் அந்தக் கடிதத்தில் அதுல் குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தில் அதிகாரம் படைத்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில் முறையான, சட்டப்பூர்வமான விசாரணைகளை அமலாக்கத்துறை நடத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது அமலாக்கத்துறை வருத்தம் அடையச் செய்கிறது என்று அதுல் குப்தா கூறினார்.
டிசம்பர் 2 ஆம் தேதி தமிழக டி.ஜி.பி.,யிடம் அமலாக்கத்துறை கிரிமினல் புகாரை பதிவு செய்ததாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டிசம்பர் 16 ஆம் தேதி நினைவூட்டல் வழங்கியதாகவும் அதுல் குப்தா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"விசாரணை பாரபட்சமற்றது மற்றும் தொழில்முறையானது என்று தெரிவிக்கப்பட்டால், உங்கள் விசாரணைக்கு உதவும் வகையில், தொடர்புடைய பொருள், விவரங்கள் மற்றும் ஆவணங்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அதுல் குப்தா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“