/indian-express-tamil/media/media_files/X2yoqC9TYXQnF6Rd7XOA.jpg)
மறைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தியானேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.2.56 கோடி மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை (இ.டி) முடக்கி வைத்துள்ளது. Photograph: (IE)
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் சிக்கிய, மறைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தியானேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.2.56 கோடி மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை (இ.டி) முடக்கி வைத்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தியானேஸ்வரன், கடந்த 1996-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் (டாமின் - TAMIN) தலைவராகப் பதவி வகித்தார். அப்போதைய காலகட்டத்தில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமான வழிகளில் அவர் சொத்துகளைக் குவித்ததாகப் புகார் எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் முதலில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 1991 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி தியானேஸ்வரன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.7.34 கோடி சொத்துகளைச் சேர்த்தது கண்டறியப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணையின் அடிப்படையில், கடந்த 2017-ம் ஆண்டு அமலாக்கத் துறையும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
தியானேஸ்வரன் பதவியில் இருந்தபோது, ஷில்பி கிரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நமச்சிவாயம் அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் பெயரில் அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்கப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, சில ஆண்டுகளுக்கு முன் தியானேஸ்வரன் ஐ.ஏ.எஸ் காலமானார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, தியானேஸ்வரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, ரூ.1.19 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த அமலாக்கத் துறை, ரூ.1.7 கோடி மதிப்புள்ள 16 அசையாச் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.86.24 லட்சம் பணம் என மொத்தமாக, ரூ.2.56 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன.
மறைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தியானேஸ்வரனின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் கவனம் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.