Tamil Nadu News: அ.தி.மு.க.வினுடைய அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. மூலம் சோதனை நடைபெற்றுள்ளது என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று கழக பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமையத்தில் ஒருசிலர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அவர்கள் தலைமை அலுவலகத்தில் இருக்கின்ற கதவுகள், அறைக்குள் இருக்கும் கணினி மற்றும் இதர பொருட்களை சேதப்படுத்தி, தீ வைத்து அழித்தனர். மேலும், பல பொருட்களை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.
கழகத்திற்கு சொந்தமான இடத்தினுடைய பத்திரம் எல்லாம் தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்தது, அவை அனைத்தையும் கிழித்தெறிந்துள்ளனர். அதோடு தலைமை கழகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியிருக்கின்றனர்.
இப்படி வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு கலங்கம் விளைவிக்கின்ற விதத்தில் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகார் அளித்தோம். ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகையால் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து தடையங்களை நேற்று சேகரித்தார்கள்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.இன் ஆட்சியிலும் சரி, அம்மா ஆட்சியிலும் சரி, இதுபோன்ற சோதனைகள் நேர்ந்துள்ளது.எப்போதெல்லாம் சோதனை ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் தொண்டர்களுடைய ஆதரவோடு எங்கள் கட்சி, அச்சோதனையை வென்று சாதனை படைத்துள்ளோம்.
அதே போல, இந்த முறையும் அனைத்து தொண்டர்களும் இனைந்து அம்மாவின் அரசை அமைப்போம். இதுவே எங்களுடைய லட்சியம்”, என்று கூறினார்.
மேலும், “அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படவில்லை. ஒருசிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் பொதுக்குழு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது.
ஓ.பி.எஸ். மன்னிப்பு கேட்டாலும் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை உணர்வோடு தான் இணைந்து அவருக்கு பெரிய பதவியை கொடுத்தோம்.
ஆனால், இந்த கட்சியை உடைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார். அதோடு தலைமை கழகம் ஒரு புனிதமான இடம். அப்படிப்பட்ட இடத்திற்கு ஆட்களுடன் வந்து பொருட்களை சேதப்படுத்தி கொள்ளையடித்தல் தொண்டர்கள் எப்படி மன்னிப்பார்கள்?” என்று கேள்வியெழுப்பினார்.
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொறுத்தவரை 2,663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதில் 96 சதவீதம் உறுப்பினர்கள் எங்கள் தரப்பில் இருக்கிறார்கள். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எல்லாரும் ஒருசிலர் தவிர எங்களுக்கு சார்பாக இருக்கிறார்கள். இதனாலேயே, சட்டரீதியாக யாரும் எங்களை எதுவும் செய்துவிட முடியாது.
தி.மு.க. பொறுத்தவரை, ஆட்சிக்கு வருமுன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்பதை அவர்களுடைய நிலைப்பாடாக கொண்டிருக்கின்றனர்.
ஆட்சிக்கு வருமுன், தேர்தல் நேரத்தில் தங்களின் அறிக்கையாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆயினும் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொய் பேசுவதில் தி.மு.க.விற்கு நோபல் பரிசு அளிக்கவேண்டும்”, என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil