அண்மையில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது. இந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று, தமிழகத்தின் புதிய ஆளுநராக கே.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் மாளிகையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது அதிமுக நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். ஆளுநரை சந்திக்க சென்ற அதிமுக கட்சியினர் குழுவில், ஓபிஎஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி, "உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்து உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பலர் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் புகார் கொடுக்க சென்ற போது அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை வேண்டுமென்றே தாமதமாக அறிவித்தனர். திமுக வேட்பாளர்களின் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அதிமுகவினரை தோல்வி அடைந்தவர்களாக அறிவித்துள்ளனர். தேர்தலில் இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அடுத்து நடைபெற இருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலையும் நியாமாக நடத்த வேண்டும் என்றார்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கடந்த வாரங்களில் ஆளுநரை தனித்தனியே சந்தித்து குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil