இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் சாதி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கேட்பது ஏன்? என எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ”தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. காய்ச்சல் பரவலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர் பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் விளக்கம் கேட்கிறார், அதிலும் ஜாதி குறிப்பிட்டு கேட்கிறார். இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் சாதி உள்ளிட்ட விவரங்களை கேட்பது பிரச்சினையை ஏற்படுத்தும்; சாதி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பெண் பயணிகளிடம் கேட்பது ஏன்? இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என வாக்குறுதி தரப்பட்டது ஆனால் தற்போது அப்படி நடக்கவில்லை.
பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும். மற்ற பேருந்துகளில் ஏறினால் கட்டணம் செலுத்த வேண்டும். இது திராவிட மாடல் ஆட்சி இல்லை, தந்திர மாடல் ஆட்சி. மக்களை ஏமாற்றும் ஆட்சி இது. இனியாவது எதிர்க்கட்சிகள் சொல்கின்ற குறைகளை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசில் தரக்குறைவான பொருட்கள் வழங்கி பெரிய அளவில் முறைகேடு நடந்தது. தி.மு.க கொடுத்த பொங்கல் பரிசு மக்கள் மறக்க முடியாத பரிசாக அமைந்தது. இனியாவது முறைகேடு இல்லாமல் பொங்கல் பரிசை அரசு வழங்க வேண்டும். அனைவரின் விருப்பம் அதுதான்.
நானும் டெல்டாகாரன் தான் வீர வசனம் பேசினால் மட்டும் போதாது, டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தேவை பற்றி தெரியாமல் பேசிவிட்டு போனார்கள். இதனை நம்பி விவசாயிகள் 5 லட்சம் ஏக்கரில் பயிரிட்டனர். ஆனால் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே முழுமையாக பயன் கிடைத்தது.
குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் முழுமையான விளைச்சலை பெறவில்லை. கடன் வாங்கிதான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். விவசாயிகளை தி.மு.க அரசு ஏமாற்றியுள்ளது. தி.மு.க ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது,” என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.