சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பெண்களுக்கு எதிரான வழக்குகளை தி.மு.க அரசு மெத்தனப் போக்குடன் கையாளுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவர்களை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு யார் அளித்தது, இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை 10-க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், விடியா தி.மு.க அரசின் காவல்துறை வழக்கம் போல மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு புகாரளித்தவர்கள்
அலைக்கழிக்கப்பட்டதால், இக்குற்றம் தொடர்ந்து நடைபெற்றதாக தகவல்கள் வருகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால், அதன் தீவிரத்தன்மை உணர்ந்து, முறையாக விசாரிக்க வேண்டும் என்பது மு.க. ஸ்டாலின் அரசின் காவல்துறைக்கு தெரியாதா?
பெண்களுக்கு, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படும் நிலையை உருவாக்கியதோடு மட்டும் அல்லாமல், பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இவ்வழக்கில் தொடர்புள்ள கயவர்கள் அனைவருக்கும் கடுமையான சட்டபூர்வ தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்கவும், அத்தகைய புகார்கள் மீது தாமதமின்றி தீவிர விசாரணை மேற்கொள்ளவும் மு.க. ஸ்டாலினின் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவர்களை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு யார் அளித்தது, இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, 2 குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், 5 பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்?
தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.” என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“