சென்னை கிண்டில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என். ரவியை, முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (நவ.23) சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர். இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. இதனை நான் ஆளுநரிடம் தெரிவித்தேன்.
கோவையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மக்கள் நடமாட்டம் உள்ள நிகழ்ந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பொதுவாக, பயங்கரவாத செயல்கள் முன்கூட்டியே உளவுத் துறைக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் இந்த விவகாரத்தில் உளவுத் துறை முழு தோல்வி அடைந்துள்ளது. இது திமுக அரசின் திறனற்ற தன்மையை காட்டுகிறது.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி சம்பவத்தில் முழுமையான விசாரணை முன்கூட்டியே நடந்திருந்தால் வன்முறை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட்டு இருக்காது.
மேலும் திமுக ஆட்சியில் மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் போதைப் பொருள்கள் சர்வசாதாரணமாக நடமாடுகிறது.
பள்ளி மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இது மட்டுமின்றி நம்ம ஊரு சூப்பரு என்ற பேனரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது.
ரூ.350 மதிப்புள்ள பேனருக்கு ரூ.7,906 செலவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி டெண்டர் இல்லாமல் பார் நடத்துதல், 24 மணி நேரமும் மதுக் கடை திறப்பு என மற்றொரு ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil