அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அவர்களுக்கு தி.மு.க அரசு பட்டை நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டமன்ற தேர்தலின் போது வெளியிட்ட வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் சொல்லி மக்களை திமுக ஏமாற்றுகிறது. தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்த பின் அரசு ஊழியர்களுக்கு தி.மு.க பட்டை நாமம் போட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றாதது பற்றி திருச்சியில் பேட்டி அளித்தேன். என் பேட்டிக்கு பதில் சொல்லாமல் பெயரே இல்லாமல் ஒரு அறிக்கையை தி.மு.க வெளியிட்டுள்ளது. உண்மை சுட்டதால் 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை ஆட்சியாளர்கள், ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், அதிமுக மீது பாய்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்பது நிழல் அரசை போன்றது, அது சுட்டிக்காட்டும் குறைகளை நேர்மையான அரசு ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“