/indian-express-tamil/media/media_files/2025/07/30/edappadi-k-palanisami-admk-manamadurai-speech-tamil-news-2025-07-30-19-25-47.jpg)
"தி.மு.க கூட்டணியை நம்பியுள்ளது. அ.தி.மு.க மக்களை நம்பியுள்ளது" என்று மானாமதுரையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பேசினார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பேசியது பின்வருமாறு:
ஸ்டாலின் மக்களை நம்பவில்லை, தி.மு.க கூட்டணி பலமான கூட்டணி என பேசி வருகிறார். அ.தி.மு.க மக்களை நம்பியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று விடுவோம் என ஸ்டாலின் கனவு உலகில் மிதந்து கொண்டிருக்கிறார். 210 தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெறும்.
ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் அமைதியாக திகழ்ந்தது. பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டல் செய்கின்றனர். தமிழகத்தில் முதல்வர் இருக்கின்றாரா என்ற நிலை உருவாக்கி உள்ளது. மருத்துவமனையில் முதல்வர் நாடகம் நிகழ்த்துகிறார். மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் தொடர வேண்டுமா? 50 மாத ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது
தி.மு.க ஆட்சியில் உணவு பொருட்கள் மற்றும் கட்மான பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தி.மு.க அரசு தவறிவிட்டது. அ.தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சி என நாங்கள் நிரூபித்துக் காட்டினோம். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான குடி மராமத்து திட்டத்தினை தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போட்டு விட்டனர். காவிரி வைகை குண்டாறு திட்டத்தை புதுக்கோட்டையில் நாங்கள் துவக்கினோம். அதனை முடக்கி விட்டனர். காவிரியில் வரும் உபரி நீர் இன்று இப்போது இப்பகுதியில் நல்ல விளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் காவிரி - வைகை - குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்.
உதயநிதி ஸ்டாலின் உழைத்து துணை முதல்வராக வரவில்லை. குறுக்கு வழியில் ஸ்டாலின் முயற்சியால் வந்துள்ளார். கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அரசியலிலும் அதிகாரத்திலும் பதவிக்கு வர முடியும். குறுக்கு வழியில் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நாட்டு மக்கள் புகழ் பாட மாட்டார்கள்.
விஷ சாராய சம்பவத்தில் உளவுத்துறை தோல்வியே காரணம். தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் போதை பொருட்கள் விற்பனை ஆகிறது. நாங்கள் பலமுறை எச்சரித்தும் தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்து விட்டது. இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக்கி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலம் சார்ந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க அரசால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க அரசு அமைந்த உடன் நிறைவேற்றப்படும்.
'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை துவங்கியவர். இதுவரை அவரது குடும்பத்துடன் இருந்துள்ளார். மக்களுக்கு 46 பிரச்சனைகள் உள்ளது என்று தெரிந்தும் 4 ஆண்டுகளாக என்ன செய்தார். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. பை பை ஸ்டாலின்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.