முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எண்டோஸ்கோப் சிகிச்சைக்கா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம், ஆளும் திமுக அரசு மீதான விமர்சனங்களை முன்வைப்பது என பிஸியாக இருக்கிறார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் ஊரக உள்ளாட்சியில் காலியாக இருந்த இடங்களுக்கான இடைத் தேர்தலில் ஆளும் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (அக்டோபர் 20) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தார்.
இந்த நிலையில்தான், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 21) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது தொடர்பான எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதே எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு எண்டோஸ்கோப் சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பழனிசாமி காலை 6:30 மணியளவில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அறை எண் 11ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை தொடர்பாக எண்டோஸ்கோப் செய்யப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை முடிந்தது இன்று மதியத்திற்குள் எடப்பாடி பழனிச்சாமி வீடு திரும்புவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நலமடைந்து தொடர்ந்து தீவிர அரசியலில் இயங்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"