அதிமுக நிர்வாகிகளை பயமுறுத்தும் விதமாக முதல்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 20 தொகுதிகளில் 8-ல் ஜெயித்தால்தான் ஆட்சி தொடரும் என கூறியிருக்கிறார் அவர்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பொறுப்பை ஏற்ற நாள் முதல் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிற வகையிலேயே பேசி வந்திருக்கிறார். திமுக தரப்பில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோதும் சரி, டிடிவி தினகரன் தரப்பில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் செய்யப்பட்டபோதும் சரி, அவர் ‘இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடரும்’ என்றே அழுத்தமாக குறிப்பிட்டார்.
இந்தச் சூழலில்தான் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிறது. திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக நியமித்திருக்கிறது.
மேற்படி பொறுப்பாளர்களுடன் இன்று (நவம்பர் 3) சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில்தான் முதல்முறையாக நிர்வாகிகளை சற்றே பயமுறுத்தும் வகையில் தனது பேச்சை அமைத்துக்கொண்டார் முதல்வர்!
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் மூத்த தலைவர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பலர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 120 பேரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘20 தொகுதிகளிலும் அவசியம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். 8 தொகுதிகளில் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்’ என்று அவர் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: ‘20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அனைத்திலும் நாம் வெற்றி பெற்று ஆக வேண்டும். ஆர்.கே.நகரில் ஏற்பட்ட நிலையை நாம் மாற்றிக் காட்ட வேண்டும். கட்சி நமது பக்கம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவும் ஆட்சியை 5 ஆண்டுக்கு கொண்டு செல்லவும் இடைத்தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் ஜெயித்தே ஆக வேண்டும்.
அதற்கு உங்களுக்கு என்னென்ன உதவி வேண்டுமோ அதை தலைமை கழகத்தில் கேளுங்கள். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.’ என்றார் அவர்.
கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, கே.பி.அன்பழகன், உதயகுமார், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், துரைக்கண்ணு உள்பட பலர் பங்கேற்றனர். தற்போது அதிமுக.வுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், மேலும் 8 தொகுதிகளில் ஜெயித்தால் மட்டுமே மெஜாரிட்டி எண்ணிக்கையை பெற முடியும் என்பதையே முதல்வர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.