Advertisment

அ.தி.மு.க உண்ணாவிரதம்: சட்டப்பேரவையில் பேச விட்டிருந்தால் கிழிகிழினு கிழித்திருப்பேன் - இ.பி.எஸ் காட்டம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பவம் குறித்து, “சட்டப்பேரவையில் நான் பேசுவதை நேரலை செய்து இருந்தால், கிழி கிழி என கிழித்து இருப்பேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
protest

Picture Source: x/@EPSTamilNadu

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00


கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிய தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார், எஸ்.பி, மற்றும் கள்ளகுறிச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் கூண்ட்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அறிவித்துள்ள மு.க. ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட எதிர்கட்சிகள், தமிழகத்தில் ஆளுமை தி.மு.க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 20-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில், சரியான நடவடிக்கை எடுக்காத ஆளும் தி.மு.க  எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு சென்று எதிர்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்தனர். அ.திமு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று முன் தினம் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அ.தி.மு.க-வினர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி கடும் அமளியில் ஈடுபட்டு வந்ததால், அ.தி.மு.க உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட, சபாநாயகர் அப்பாவு, இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க உறுப்பினர்கள் சபை நடவடிக்கையில் கலந்துகொள்ள தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிய தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அ.தி.மு.க-வின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் நேரில் சந்தித்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரும் உண்ணாவிரதம் இருந்தார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க-வின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தி.மு.க-வின் முகத்திரை கிழியும் என்பதால் அதற்கு மறுக்கின்றனர். எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்க நினைத்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். 2026-ல் நிச்சயம் ஆட்சி மாறும். அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியில் நல்லாட்சி மலரும்” என்று கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு நெஞ்சை பதற வைத்து உள்ளது. விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோய் உள்ளன. நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ விசாரணை கிடைக்கும் என்று நம்புகிறோம். 

சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மக்கள் மன்றத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம். அடுத்தக்க்கட்ட போராட்டம் குறித்து தலைமைக்கழக நிர்வாகிகள் உடன் கலந்து முடிவு செய்வோம்.” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முதலமைச்சர் அஞ்சுகிறார். சி.பி.ஐ.சி.டி விசாரணையால் எந்த பயனும் கிடைக்கப்போவது இல்லை. சி.பி.சி.ஐ.டி விசாரணை அரசுக்கு சாதகமாகவே இருக்கும்.” என்று கூறினார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இருந்து இருந்தால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிழி கிழி என்று கிழித்து இருப்பார் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்த கேள்விக்கு, பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பேரவையில் நான் பேசுவதை நேரலை செய்து இருந்தால், கிழி கிழி என கிழித்து இருப்பேன்” என்று கூறினார். 

தொடந்து பேசிய எடப்ப்பாடி பழனிசாமி,  “அ.தி.மு.க உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் அச்சத்தோடு வெளியேறுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அச்சம் என்பது எங்கள் அகராதியில், அ.தி.மு.க மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட கட்சி” என்று கூறினார்.

மேலும், காவல்துறை உள்ளிட்ட மானிய கோரிக்கைகளில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக விற்கப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. அமைச்சரைவிட சட்டப்பேரவைத் தலைவர்தான் அதிகம் பேசுகிறார். அமைச்சர் சொல்ல வேண்டிய பதில்களை சபாநாயகரே சொல்லிவிடுகிறார். அந்த ஆசனம் புனிதமான ஆசனம், அதில் அமர்ந்து உள்ளவர்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நாடகம் ஆட விரும்பவில்லை” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திமுக ஆட்சி ஏற்பட்டது முதல் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகின்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், கள்ளச்சாராய மரணங்கள் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க குரல் கொடுக்கவில்லை. கூட்டணி தேர்தலோடு முடிந்துவிட்டது. ஆனால் எந்த கட்சியும் மக்கள் குரலாக ஒலிக்கவில்லை. 

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆதரவு அளித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், “மரியாதைக்குரிய நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள், எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி, அவர்கள் நிர்வாகிகளை அனுப்பி வைத்தார் அதற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறினார்.  

எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதளத்தில் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டசபையில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?.

கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்று வரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? பயமா ஸ்டாலின்? கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment