Advertisment

போதைப் பொருள் புழக்கம்; தி.மு.க அரசை கண்டித்து போராட்டம்: இ.பி.எஸ் அறிவிப்பு

தி.மு.க அரசை கண்டித்து மார்ச் 4 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு, அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi K Palaniswami speaks with AIADMK IT Wing at Chennai  Tamil News

'போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்-ஐ போலீசார் தேடும் செய்தி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது' - எடப்பாடி பழனிசாமி.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Edappadi K Palaniswami | Aiadmk | Dmk: 'போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவு ஏற்பட காரணமான தி.மு.க அரசுக்கு கண்டனம்' எனத் தெரிவித்துள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளது. தமிழ்நாடு போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். 

Advertisment

எனவே, தி.மு.க அரசை கண்டித்து மார்ச் 4 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு, அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 

தி.மு.க அரசு அமைந்த நாளில் இருந்து கடந்த 32 மாத காலமாக தமிழ் நாட்டில் போதைப் பொருட்களுடைய புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எப்போதெல்லாம் சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்து நான் வெளிப்படுத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

அதேபோல, சட்டமன்றத்திற்கு வெளியேயும், தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும், செய்தியாளர்கள் சந்திப்பிலும், அறிக்கைகளின் வாயிலாகவும் அவ்வப்போது நான் சுட்டிக் காட்டி உள்ளேன். போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பினால் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட இளைஞர்களுடைய வாழ்க்கை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும் மீண்டும் மீண்டும் நான் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

அப்படி இருந்தும் இந்த தி.மு.க. அரசு கண்டும் காணாமல், வாய்மூடி மவுனியாக இன்றுவரை இருந்துகொண்டு இருக்கிறதே ஒழிய, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஏற்கெனவே, தமிழ் நாட்டில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியாகி அந்தக் குடும்பங்கள் நடுத் தெருவிலே நிற்கின்ற நிலை உருவாகி உள்ளது. இது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், தற்போது வெளியாகி இருக்கின்ற செய்தி, தமிழ் நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா முழுவதும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற தி.மு.க கட்சியை ஓர் அச்சத்தோடு பார்க்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதைப் பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை, அந்த நாடுகளுடைய காவல் துறை தேடி வந்த நிலையில், அவர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்த பிறகு, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக அமைப்பும், இந்த போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக இயங்குகின்ற டெல்லியினுடைய சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இந்த கும்பலுடைய தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் தான் என்ற செய்தியும், அவரை காவல் துறை தேடுகிறது என்ற செய்தியும் வந்தபோதுதான், உண்மையிலேயே தமிழக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக், தி.மு.க அரசின் முதல்-அமைச்சருடனும், விளையாட்டுத் துறை அமைச்சருடனும், மேலும் பல அமைச்சர்களுடனும் எடுத்துள்ள புகைப்படங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தலைகுனிவாகும்.

இன்று, தமிழ் நாட்டைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் தலைவனாக செயல்பட்டுள்ள தி.மு.க-வைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கால் தமிழ் நாட்டிற்கே மிகப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழக காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில், மேற்படி ஜாபர் சாதிக்குக்கு பரிசளித்துப் பாராட்டுகின்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் நாட்டின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய, முதலமைச்சருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்ற காவல் துறைத் தலைவர், உலகின் பல நாடுகளிலே போதைப் பொருட்களை புழக்கத்திலே விட்டிருக்கின்ற, போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனோடு நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார் என்பதைப் பார்க்கின்றபோது, உண்மையிலேயே தமிழ் நாட்டு மக்களுடைய பாதுகாப்பு இந்த அரசால் எந்த லட்சணத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்கிற பேரச்சம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

இதன்மூலம் போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு அரசு எந்திரத்திற்கே தொடர்பு இருக்கிறது என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. எனவே, 'வேலியே பயிரை மேய்கிறதா?' என்ற சந்தேகம் தமிழ் நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது. அதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிப்படுத்த வேண்டிய தலையாய கடமை எனக்கு இருக்கிறது.

எனவே, தி.மு.க அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும்; தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், 4.3.2024 திங்கட் கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள நிர்வாகத் திறனற்ற தி.மு.க அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Aiadmk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment