/indian-express-tamil/media/media_files/2024/12/26/icxdB3OVUXwvxIoU3emK.jpg)
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நாளை வெள்ளிக்கிழமை (டிச.27) ஆர்ப்பாட்டம் நடைபெறும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க அரசு பதவியேற்ற நாள்முதலே, தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள், வயதானோர் உள்ளிட்ட பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு சட்டம்-ஒழுங்கு அடியோடு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து, அதிமுக சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும்: மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான பாவட்டத் தலைநகரங்களிலும், நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெண்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.