பா.ஜ.க தலைவர்கள் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் தமிழகத்தில் ‘ரோடு ஷோ’ நடத்தி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த நிலையில், ‘ரோடு ஷோ நடத்தினால் ஓட்டு கிடைக்குமா, மக்களை யாரும் ஏமாற்ற முடியாது’ என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சியில் அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “ஸ்டாலின் அ.தி.மு.க-வை உடைக்க எத்தனையோ அவதாரங்கள் எடுத்தார், எத்தனையோ ரூபங்களை எடுத்தார். அவை அத்தனையும் அ.தி.மு.க தொண்டர்களின் பலத்தால் தவிடு பொடியாக்கப்பட்டது. அ.தி.மு.க-வை உருவாக்கியவர் தெய்வ சக்தி படைத்த எம்.ஜி.ஆர் அதை கட்டிக் காத்தவர். அம்மா (ஜெயலலிதா) இந்த இருபெரும் தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை. நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்வார்கள். தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க இன்றைக்கு எத்தனையோ தலைவர்கள் வந்து பேசுகிறார்கள், அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க-வின் 30 ஆண்டுகால உழைப்பு காரணமாக தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
பா.ஜ.க-வில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார், அவர் யார் என உங்களுக்கு தெரியும்; விமானத்தில் ஏறும்போது ஒரு பேட்டி கொடுப்பார்; இறங்கும்போது பேட்டி கொடுப்பார்; பேட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை; பேட்டி கொடுத்து அந்த தலைவர் மக்களை ஈர்க்கப் பார்க்கிறார்; இன்றைக்கு தலைவர்கள் மக்களை பல வழிகளில் சந்திக்கிறார்கள்; ஆனால், இந்த தலைவர் டெக்னிக்கா அப்பப்போ பேட்டி கொடுத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார்; அது ஒன்றும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் மக்களிடத்தில் எடுபடாது; இங்கே உழைக்கின்றவர்களுக்கு தான் மரியாதை உண்டு. உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க கட்சி; மக்களுக்கு நன்மை செய்த அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம்; அதனால், நீங்கள் எவ்வளவு பேட்டி கொடுத்தாலும் ஒன்றும் எடுபடப் போவதில்லை. ஏன் நான் நினைத்தால் பேட்டி கொடுக்க முடியாதா, தினம்தோறும் பேட்டி கொடுத்துக்கொண்டே இருக்கலாம், அதனால், நாட்டு மக்களுக்கு என்ன பயன் எப்போது எதைச் சொல்ல வேண்டுமோ, அப்பொழுது அதைச் சொன்னால் அதற்கு மக்களிடத்திலே நம்பிக்கை கிடைக்கும். எல்லாவற்றுக்கும் பேட்டி, எதுவும் இல்லை என்று சொல்வதற்கே இல்லை; அ.தி.மு.க-வை பொறுத்தவரை தொண்டன் முதல் நிர்வாகி வரை மக்களுக்கு உண்மை செய்வதை மட்டும் வாக்குறுதியாக கொடுப்பார்கள். அது ஐ.எஸ்.ஐ முத்திரை மாதிரி அ.தி.மு.க-வுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற ஒரே கட்சி அ.தி.மு.க, ஒரே அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம்.
இன்றைய தினம் மத்தியிலிருந்து தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன பிரயோஜனம், வருகிறவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைக் கொடுத்து அதனால் மக்கள் நன்மை பெற்று இருந்தால் பிரயோஜனம் உண்டு. அதை விட்டுவிட்டு நேரா விமானத்தில் வந்து இறங்குகிறார்கள், ரோட்டில் போகிறார்கள். அதோடு முடிந்து போனது கதை. மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா, தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரணமானவர்களா அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி, எது தவறு என்று எடைபோட்டு பார்த்து தீர்ப்பளிக்கக்கூடிய அறிவுத் திறன் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இந்த ஏமாற்று வேலை எல்லாம் தமிழ்நாட்டில் ஒன்றும் எடுபடாது. நாங்கள் 30 ஆண்டு காலம் கஷ்டப்பட்டு நிறைய திட்டங்களை கொண்டு வந்து கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்கள் நிறைய நன்மைகளை பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கு இப்படிப்பட்ட சூழ்நிலையில் யார் யாரோ வந்து ஏதேதோ பேசி மக்களை குழப்பி அந்த குழப்பத்திலே அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றார்கள். அது ஒருபோதும் நடக்காது. தமிழகத்தில் இன்றைய தினம் பா.ஜ.க-வைச் சேர்ந்த தலைவர் இந்த பகுதியிலே நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று தினந்தோறும் வாடிக்கையாக பத்திரிகையின் வாயிலாக ஊடகத்தின் வாயிலாக கருத்து தெரிவித்து வருகிறார். இங்கே ஒரு மிகப்பெரிய திட்டம் ஆழியாறு பரம்பிக்குளம் பாசன திட்டத்தில் விடுபட்டுள்ள ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டம். அந்த திட்டத்தை நிறைவேற்றித் தருவாரம். எப்படி நிறைவேற்ற முடியும். இது மாநில அரசாங்கத்தினுடைய பிரச்சனை. தமிழ்நாடு அரசு, கேரள அரசு பேசி தீர்க்கக் கூடிய பிரச்னை. அதன் அடிப்படையில் நான் முதலமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி, கருப்பன் பொள்ளாச்சி ஜெயராமன் பொதுப்பணித்துறை செயலாளர்களை அழைத்துக் கொண்டு சென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கொரொனாவால் தடைப்பட்டது. அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதை தி.மு.க அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அதனால், ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்ட அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம்.
இன்றைக்கு இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி இல்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி வருவதற்கு என்றைக்குமே வாய்ப்பே இல்லை. கேரளாவில் ஒன்று கம்யூனிஸ்ட் ஆட்சி, அல்லது காங்கிரஸ் ஆட்சி. அப்படி இருக்கும்போது, இந்த பா.ஜ.க தலைவர் எப்படி ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவார்” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் தமிழகம் வந்து ரோடு ஷோ நடத்தி பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.