முதல்வர் எடப்பாடியின் ஜரூர் அரசியல் : நெடுஞ்சாலைத்துறை ஊழல் புகாரை அமுக்கிய காவிரி..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென அரசியலில் வேகம் எடுத்திருப்பது 3 பேருக்கு ஷாக்! ஒருவர், டிடிவி தினகரன். அடுத்தவர், மு.க.ஸ்டாலின். இன்னொருவர், ஓபிஎஸ்!

By: March 4, 2018, 6:39:51 PM

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென அரசியலில் வேகம் எடுத்திருப்பது 3 பேருக்கு ஷாக்! ஒருவர், டிடிவி தினகரன். அடுத்தவர், மு.க.ஸ்டாலின். இன்னொருவர், ஓபிஎஸ்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் தன்னை நிலை நிறுத்தி வருகிறார் என்பதை பலரும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலா மூலமாக முதல்வர் ஆக்கப்பட்டவர் என்பதும், கூவத்தூர் கூத்துகளும் ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தடைக் கற்களாக இருந்தன. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு ஆயுள் எவ்வளவு நாட்கள்? என ஒலித்த குரல்களும் அவரை நிமிர விடாமல் செய்தன.

எடப்பாடி பழனிசாமிக்கு பிரதானமாக 3 குடைச்சல்கள்! முதல் குடைச்சல், டிடிவி தினகரன்! மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து அதிமுக நிர்வாகிகளை வளைத்து வருகிற டிடிவி தினகரன், எம்.எல்.ஏ.க்களையும் உருவுகிற வேலையை தொடர்ந்து செய்கிறார். இன்னொரு திடீர் ‘அட்டாக்’காக எடப்பாடி பழனிசாமி மீது சுமார் 1500 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழலை கிளப்பி விட்டது டிடிவி தினகரன் அணி!

எடப்பாடி பழனிசாமி அதை எப்படி சமாளிக்கப் போகிறார்? என எதிர்பார்த்திருக்க, அதைப் பற்றிய மூச்சே விடவில்லை அவர். மாறாக, அந்தப் புகாரை தலைமைச் செயலகத்தில் வந்து வெளியிட்ட வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் மீது வழக்குகளைப் போட்டு ஓட விட்டிருக்கிறார்.

அரசுத் துறை சம்பந்தமாக ஊழல் புகார்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க தலைமைச் செயலகம் சென்றதை பெரிய குற்றமாக கூற முடியாது. ஆனால் பாதுகாப்புப் போலீஸாரிடம் தகறாறு செய்ததாக அவர்கள் மீது வழக்கு! இதை வேறு எந்த எதிர்க்கட்சியும் கண்டிக்க வில்லை. டிடிவி அணிக்கு ஆதரவாக வேறு எந்தக் கட்சியும் வெளிப்படையாக கிளம்பத் தயாராக இல்லாததே எடப்பாடிக்கு பிளஸ்தான்!

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார்களை அப்படியே அமுக்கும் விதமாக சட்டென காவிரி பிரச்னை குறித்து பேச ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் எடப்பாடி. அவர் எதிர்பார்த்தது போலவே ஊடகங்கள் ஊழல் பிரச்னையை உதறிவிட்டு, அரசியல் நாகரீகத்தை விவாதிக்க ஆரம்பித்துவிட்டன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் தமிழ்நாடு அரசு அலட்சியமாக இருப்பதாக விமர்சனம் கிளம்புவதை அதன் மூலமாக தடுத்தாகிவிட்டது. நெடுஞ்சாலைத்துறை விவகாரமும் அமுங்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனக்கு சாதகமாக திருப்ப முயற்சிகளை எடுத்தார். ‘அனைத்துக் கட்சிக் குழுவை சந்திக்க பிரதமர் அனுமதி தரவில்லை என முதல்வர் கூறினார்’ என வெளியே வந்து பேட்டி கொடுத்தார் ஸ்டாலின். இதன் மூலமாக எடப்பாடி-மோடி இடையே உரசலை உருவாக்குவதுகூட திமுக.வின் திட்டமாக இருந்திருக்கலாம். ஆனால் உடனே அமைச்சர் ஜெயகுமாரை அனுப்பி அதற்கும் மறுப்பு தெரிவித்து சமாளித்தார் எடப்பாடி!

கிராமங்களில் ஒரு பழமொழி கூறுவார்கள். ‘நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். ரெண்டையும் கலந்து ஊதி ஊதி சாப்பிடுவோம்’ என்று! அதேபோல மக்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லாத திமுக, ‘நாங்களும் எங்களது மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேரை ராஜினாமா செய்ய வைக்கிறோம். நீங்கள் 50 எம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்’ என காய் நகர்த்தியது. வழக்கம்போல இதற்கு பதிலே கூறாமல் நகர்கிறார் எடப்பாடி.

ஓரிரு வாரங்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை, ‘பினாமி முதல்வர்’ என்றே வர்ணித்து வந்தார் ஸ்டாலின். ஆனால் அண்மையில் அடுத்தடுத்து இருமுறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் (போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்காக ஒரு முறை) வாய்த்ததால், ‘பினாமி முதல்வர்’ என்கிற பதத்தை விட்டுவிட்டார் ஸ்டாலின். காரணம், ‘ஒரு பினாமியை நீங்கள் ஏன் போய் சந்திக்கிறீர்கள்?’ என்கிற கேள்வி எழும் அல்லவா?

எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்கு உள்ளே இருக்கும் மிரட்டல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! தமிழ்நாடு முழுவதும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கிய வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 200 நிர்வாகிகள் வரை நியமிக்க வேண்டியிருக்கிறது. ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24-க்குள் அந்த நியமனங்களை செய்வோம் என முன்பு ஒரு பேட்டியில் ஓபிஎஸ் கூறினார். ஆனால் அதில் பெருமளவு இடங்களை இபிஎஸ் அணியினரே தக்க வைக்க விரும்புவதா, நிர்வாகிகள் நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது.

அண்மையில், ‘மோடி சொன்னதால் அணிகள் இணைந்தன’ என ஓபிஎஸ் கூறியதில் பாஜக மேலிடத்திற்கு அதிருப்தி! எனவே பிரதமரின் சென்னை விசிட்டில் ஓபிஎஸ்.ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதன்பிறகு ஓபிஎஸ்.ஸுக்கு இபிஎஸ் கொடுக்கும் முக்கியத்துவமும் வெகுவாக குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இதற்கு உதாரணம் கூறுவதாக இருந்தால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடன் சரி சமமாக துரைமுருகனை உட்கார வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எதிரே தனி நபராக உட்கார்ந்திருந்தார். ஓபிஎஸ் இதர அமைச்சர்கள் வரிசையில் சற்று தொலைவாக உட்கார வைக்கப்பட்டார். துணை முதல்வர் என்ற வகையிலோ, கட்சியில் தன்னைவிட உயர் பதவியில் இருப்பவர் என்ற அடிப்படையிலோ ஓபிஎஸ்.ஸுக்கு எந்த முன்னுரிமையையும் கொடுக்க இபிஎஸ் தயாரில்லை!

மொத்தத்தில் டிடிவி-க்கு ஷாக், ஸ்டாலினுக்கு பெப்பே, ஓபிஎஸ்.ஸுக்கு கடுக்கா… என கச்சிதமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்! வழக்கமாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் முக்கிய படங்கள் அனைத்தையும் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ரீ ட்வீட்’ செய்வது வழக்கம்! ஆனால் ஸ்டாலின் சந்திப்பு படத்தை மட்டுமல்ல, கடந்த இரு நாட்களில் ‘ரீ ட்வீட்’ செய்வதையே கூடுமானவரை தவிர்க்கிறார் ஓபிஎஸ்!

வடகிழக்கு மாநிலங்களில் பாஜக.வின் வெற்றிக்கு அதிமுக சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக இருந்தால், ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருக்கலாம். ஆனால் ஓபிஎஸ் மட்டுமே தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு தனியாகவும் அமித்ஷாவுக்கு தனியாகவும் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டிருக்கிறார்.

பாஜக.வை அனுசரிப்பதிலும் ஆதரவு பெறுவதிலுமே இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே தனி ‘ட்ராக்’கில் மோதல் நடக்கும் போல!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Edappadi k palaniswami cauvery issue highways tender scam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X