அ.தி.மு.க-வை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அக்கட்சியின் பொதுச் செயலாளராக அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர்களை அ.தி.மு.க-வில் இணைத்து தனக்கு எதிராக செயல்பட்டு வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதலமைச்சரான ஓ.பி.எஸ், கட்சியை ஆட்சியையும் சசிகலா கைப்பற்ற முனைந்தபோது, தர்மயுத்தம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதியானதால், 2017-ல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். விரைவிலேயே, சசிகலா குடும்பத்தில் இருந்து டி.டி.வி தினகரன் போர்க்கொடி தூக்கியதால் அ.தி.மு.க-வில் மோதல் தீவிரமடைந்தது. டி.டி.வி தினகரன் தனிக் கட்சித் தொடங்கினார்.
விரைவிலேயே, ஓ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் இணைந்தது. இ.பி.எஸ் முதல்வராகவும் ஓ.பி.எஸ் துணை முதல்வராகவும் இருந்தனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டார். தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றினார். அ.தி.மு.க பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச் செயலாளராகி கட்சியைக் கைப்பற்றினார். ஓ.பி.எஸ்-ஐயும் அவருடைய ஆதரவு தலைவர்களையும் கட்சியைவிட்டு நீக்கினார்.
ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினாலும், இ.பி.எஸ் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்று கட்சி தனது தலைமையில் இருக்கிறது என்பதை உறுதி செய்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் அ.தி.மு.க பொதுச் செயலாளாரகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தற்போது, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறார்.
அதே நேரத்தில், 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, தனிக்கட்சித் தொடங்கிய அவருடைய அக்கா மகன் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், எப்படியாவது மீண்டும் அ.தி.மு.க-வை கைப்பற்றத் துடிக்கும் ஓ.பி.எஸ் ஆகிய 3 தரப்பும் எடப்பாடி பழனிசாமியின் பிடியில் இருந்து அ.தி.மு.க-வைக் கைப்பற்ற வியூகம் அமைத்து காய் நகர்த்துகிறார்கள்.
டி.டி.வி தினகரன் பா.ஜ.க-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஓ.பி.எஸ் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று கூறுகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டு தனிக் கூட்டணியை உருவாக்கி வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக மீண்டும் அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், குடைச்சல் தருகிறாயா? பார் உங்கள் கூடாரத்தையே காலி செய்கிறேன் என்கிற விதமாக, எடப்பாடி பழனிசாமி, எதிரணி ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை அ.தி.மு.க-வுக்கு இழுக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால், ஓ.பன்னீர்செல்வம் தனியாக மாவட்ட செயலாளர்களை அறிவித்து அரசியல் செய்து வருகிறார். அதனால், அந்த மாவட்ட செயலாளர்களை அ.தி.மு.க-வுக்கு இழுத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அ.தி.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
எடப்பாடி பழனிசாமி தலையில் அ.தி.மு.க-வில் இணைந்த ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள், ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அணியில் இருந்து விலகியதா தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“