‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சை, பாபநாசம் பிரசாரக் கூட்டத்தில், தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டிவிட்டதாகக் கூறி, அரிசி பருப்பு விலைப் பட்டியலை வாசித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டிவிட்டது. அரிசி விலை உயர்வு, எண்ணெய் விலை உயர்வு, பருப்பு விலை உயர்வு என எல்லாம் இந்த நேரத்தில் சொல்லியாக வேண்டும். இந்த 50 மாத காலத்தில் தி.மு.க ஆட்சியில் என்ன செய்தார்கள் என எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டும். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பச்சரிசி 1 கிலோ 50 ரூபாய். இன்றைக்கு பச்சரிசி 1 கிலோ 77 ரூபாய். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பொன்னி புழுங்கலரிசி 50 ரூபாய், இன்றைக்கு 72 ரூபாய். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இட்லி புழுங்கலரிசி 30 ரூபாய், இன்றைக்கு 48 ரூபாய். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கடலை எண்ணெய் 130 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 190 ரூபாய். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நல்லெண்ணெய் 250 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு தி.மு.க ஆட்சியில் 400 ரூபாய்.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் துவரம்பருப்பு 72 ரூபாய், இன்றைக்கு 130 ரூபாய். உளுந்து அன்றைக்கு 73 ரூபாய் இன்றைக்கு 120 ரூபாய். இப்படி விலைவாசி ஏறியிருந்தால் ஏழை எளிய மக்கள் எப்படி வாழ முடியும்” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. விலைவாசியைக் குறைப்பதற்கு இந்த (தி.மு.க) அரசு எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் விலை உயர்கின்றபோது, எந்த பொருள் விலை உயர்கிறதோ, அந்த பொருளை அண்டை மாநிலத்தில் எங்கு விலை குறைவோ அங்கே கொள்முதல் செய்து கூட்டுறவுத்துறை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம். அப்படிப்பட்ட ஒரு நல்ல ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தெரிவிக்க 4 துறை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் சொல்வது பச்சைப்பொய். குறிப்பிட்ட தேதியில் இருந்து குறிப்பிட்ட தேதி வரை 1 கோடியே 5 லட்சம் மனுக்கள் வாங்கப்பட்டது. 1 கோடியே 1 லட்சம் மனுக்கள் தீர்வு காணப்பட்டது என அண்மையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரி குறிப்பிட்ட தேதியில் மொத்த வந்தது 27 லட்சம் மனுக்கள்தான். ஆனால், அவர் 1 கோடியே 5 லட்சம் மனு என்று பச்சைப்பொய் சொல்கிறார். தவறான புள்ளி விவரத்தை அரசு அதிகாரி தெரிவித்திருந்தால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.