Advertisment

'போதைப் பொருள் கடத்தலில் தி.மு.க நிர்வாகி; வெட்கக் கேடு': இ.பி.எஸ் காட்டம்

'போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க நிர்வாகி என்பது வெட்கக்கேடானது. அந்த நபரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi K Palaniswami condemns DMK Jaffer Sadiq Alleged Involvement in Rs 2000 Cr Drug Smuggling Racket Tamil News

"தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது" - இ.பி.எஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Edappadi K Palaniswami | Aiadmk | Dmk: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

Advertisment

நான் எத்தனையோ முறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டப்பேரவையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இந்த விடியா தி.மு.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறிவருதையும் ஆக்கப்பூர்வமான பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக சுட்டிக்காட்டி வருகிறேன்.

தமிழகம் முழுவதும் மூலை, முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன் என்று பல வகைகளிலும் போதைப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை ஊடகங்களும், நாளிதழ்களும் தினமும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.

2021-ம் ஆண்டு 20.45 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 6,853 வழக்குகள் பதியப்பட்டதாகவும். 9,571 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் விடியா தி.மு.க. அரசின் உள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக்கம் 60). இதில் எத்தனை பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது? மற்றும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று முதல்-அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்று 2021-2022ம் ஆண்டு உள்துறை மானியக் கோரிக்கையில் நான் சட்டமன்றத்தில் பேசினேன்.

இந்நிலையில் முன்னாள் காவல்துறை தலைவர் 'ஆபரேஷன் கஞ்சா 0.1, 0.2, 0.3, 0.4' என்று போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறிய நிலையில், விடியா தி.மு.க. அரசு பொறுப்பேற்று 32 மாத கால ஆட்சிக்குப் பிறகும், இதுபோன்ற போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப் பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருவதையும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பொம்மை முதல்-அமைச்சரின் கீழ் செயல்படும் தமிழக காவல்துறை தோல்வி அடைந்ததையே இது காட்டுகிறது.

இதற்கு காரணம், இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தி.மு.க.-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் தலையீடு உள்ளதாக அவ்வப்போது வரும் நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகளில் இருந்தே தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படாத நிலையை ஊகிக்க முடிகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக நேற்று (25.2.2024), டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளதாக, ஊடகங்கள் முக்கியச் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.

தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது என்றும், இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத் துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வரும் நிலையில், தி.மு.க.-வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலின் மனைவி 'கிருத்திகா உதயநிதி' இயக்கத்தில் இம்மாதம் வெளியான 'மங்கை Travel of Women' என்ற படத்தைத் தயாரித்தவர் இந்த ஜாபர் சாதிக் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடி வரும் நிலையில், தி.மு.க.-வால் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்பட்ட முக்கிய நிர்வாகி, டெல்லியில் போதை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளதும், அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயில் யாருக்கெல்லாம் பங்கு கொடுத்தார் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்தத் தலைமை நிர்வாகி, தி.மு.க. தலைமை குடும்பத்துடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம், தான் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக இந்ந நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Aiadmk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment