முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்த நிலையில், “அம்மா உணவகங்களை ஆய்வு செய்வது போல நாடகமாடுகிறார் ஸ்டாலின், தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை” என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அம்மா 1 ரூபாய் இட்லி, 2 ரூபாய் சப்பாத்தி, 5 ரூபாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் என மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் கொண்டுவரப்பட்டது. அம்மா உணவகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அ.தி.மு.க ஆட்சிக்குப் பின், 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும், அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அம்மா உணவகங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தில் உணவு தரமாக இருக்கிறதா என்று அம்மா உணவகத்தில் அளிக்கப்படும் உணவை ஸ்டாலின் சாப்பிட்டு பரிசோதித்துப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டமாக இருந்தாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அம்மா உணவகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் என்று தி.மு.க ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஸ்டாலினைப் பாராட்டி பதிவிட்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்த நிலையில், “அம்மா உணவகங்களை ஆய்வு செய்வது போல நாடகமாடுகிறார் ஸ்டாலின், தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை” என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் ஓமலூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை21) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போதூ அவர் கூறியதாவது: “ஏழை, எளிய தொழிலாளர்கள் குறைந்த விலையில் சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம் தமிழ்நாடு முழுவதும் மலிவு விலையில் உணவு வழங்கி வருகிறது. அப்படிப்பட்ட அம்மா உணவகம் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சரியான முறையில் செயல்படவில்லை.
சென்னையில் 47 மையம் செயல்பட்டு வந்தது. தி.மு.க பொறுப்பேற்ற பிறகு 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை. அம்மா உணவகத்தின் மீது அக்கறை இருந்தால் கடந்த 3 ஆண்டு காலத்தில் ஆட்சியாளர்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு தற்போது இந்த ஆய்வு நடைபெற்று இருக்கிறது. -
அம்மா உணவகத்தின் மீது அரசு கவனம் செலுத்தாத காரணத்தினால் ஏழை எளிய மக்கள் சரியான உணவு கிடைக்காததால் இந்த ஆட்சியாளர்கள் மீது ஏழை எளிய தொழிலாளர்கள் வெறுப்பில் உள்ளனர். இதனை அறிந்த பிறகு, தமிழக முதலமைச்சர் அம்மா உணவகங்களை ஆய்வு செய்வது போல நாடகம் ஆடுகிறார்.
தி.மு.க. குடும்பக் கட்சியாக ஆட்சி நடத்தி வருகிறது. துணை முதல்வர் பதவி ஸ்டாலினின் மகனுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல. தி.மு.க-வில் எத்தனையோ மூத்த முன்னோடிகள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் துணை முதல்வர் பதவி வழங்க முன்வரக்கூடாது.
தி.மு.க. அரசு இதுவரை 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. தமிழக அரசு கடனில் தான் செயல்பட்டு வருகிறது.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.