அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் இரட்டைத் தலைமைகளான ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் சில நாட்கள் அமைதியாக இருந்து வந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களாக வேகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா ஆய்வுக் கூட்டங்களில் பங்கெடுப்பது, மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசுக்கு ஆலோசனை வழங்குவது என்று அதிமுக தலைவர்கள் புறப்பட்டிருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே எழுந்த யார் எதிர்க்கட்சி தலைவர் என்ற போட்டி பெரும் மோதலாகமாறும் என்று அரசியல் களத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்காமல் முடித்துக்கொண்டார்கள். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவரானார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் அங்கே அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் செல்வாக்காக வலம் வருகின்றனர். அதிமுகவில் அரசு கோரிக்கைகளுக்காக கட்சி லெட்டர்பேடில் ஓ.பன்னீர்செல்வம் தனியாக அறிக்கைகளை விட்டு வருகிறார். அதே போல, எதிர்க்கட்சி தலைவராக தலைமைச் செயலகத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி விமர்சன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
அதாவது அதிமுகவில் உள்ள இரட்டைத் தலைமைகளில் ஒரு தலைமை ஓ.பி.எஸ் ஆளும் கட்சியான திமுகவை நோக்கி மிதவாதப் போக்கையும் மற்றொரு தலைமை ஈ.பி.எஸ். தீவிர விமர்சனப் போக்கையும் முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் கொரோனா ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்கிறார். ஆனால், சேலத்தில் உள்ள மருத்துவமனைகளில் சோலோவாக சென்று ஆய்வு செய்கிறார். கொரோன தடுப்பு பணிகளில் அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காடி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீது விமர்சனக் கணைகளை தொடுக்கிறார்.
இதற்கு மாறாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உடன் கலந்துகொண்டார்.
அதே போல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 எம்.எல்.ஏ.க்களும், கோவை மாவட்டத்தில் தடுப்பூசிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் மனு அளித்தனர்.
இந்த சூழலில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகை தருகிறார். அவர் கடந்த 10 நாட்களில் கோவையில் இரண்டாவது முறையாக வருகை தருகிறார். கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை கோவைக்கு வந்தனர்.
முழு ஊரடங்கு நிச்சயமாக அமல்படுத்தப்படவில்லை. அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இதற்கு முன்பு, கோயம்புத்தூரில் கிருமிநாசினி தெளிக்க ஒரு வார்டுக்கும் ஒரு வாகனம் இருந்தது. ஆனால், இப்போது ஒரு மண்டலத்திற்கு ஒரு வாகனம் தான் உள்ளது” என்று கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் விமர்சனம் செய்துள்ளார்.
அதே போல, முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மாவட்டத்தில் உள்ள குறைபாடுகளை பட்டியலிட்டார். “மாவட்டத்தில் தினமும் ஆயிரக் கணக்கில் தொற்றுகள் பதிவாகிறது. அவர்கள் அனைவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பக்கூடாது” என்று அவர் கூறினார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, சில நாட்கள் அமைதியாக இருந்த எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்கள் இப்போது சுறுசுறுப்பாகி விரைவாக செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் சோலோவாக சென்று சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார் என்றால், மற்றொரு பக்கம் ஓ.பி.எஸ் அரசின் ஆய்வுக் கூட்டங்களில் மிஸ் பண்ணாமல் பங்கேற்று மீதவாதப் போக்கில் அணுகிறார். தலைமை இப்படி செயல்படுகிறார்கள் என்றால், முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்து கோரிக்கை வைக்கின்றனர். இதனைப் கவனித்து வரும் அரசியல் நோக்கர்கள், தொற்றுநோய்க் காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து அரசை முடுக்கிவிட சரியான போட்டி சபாஷ் என்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“