முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நாளில் எடப்பாடி பழனிசாமி, பசும்பொன் கிராமத்திற்கு செல்ல உள்ள நிலையில், தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு தேவர் அமைப்புகள் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளன.
சுதந்திரப் போரட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளான தேவர் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அ.தி.மு. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பசும்பொன் கிராமத்திற்கு சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக அ.தி.மு.க அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதுமட்டுமில்லாமல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த தங்கக் கவசத்தை வங்கியிலிருந்து பெற எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான திண்டுக்கல் சீனிவாசன் நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்சோபர் 30-ம் தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பல்வேறு தெவர் அமைப்பினர் புதன்கிழமை அவரை சேலத்தில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் புரட்சி பார்வர்ட் பிளாக் ஆண்டித்தேவர் பிரிவு தலைவர் முத்துராமன், முக்குலத்தோர் உறவின்முறை சங்கம் மறத்தமிழர் சேனை ஆதிமுத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை கண்ணன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு அகமுடையார் மக்கள் தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் 27-ந் தேதி காளையார் கோவிலில் நடைபெறும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிகழ்வின் போது முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் வெற்றிவேல், துரை தனராஜன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கலை பிரிவு செயலாளர் சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தேவர் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள வேண்டும் என்று பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவனர் முருகன்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“