மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென போனில் பேசினார். காவிரி பிரச்னை குறித்து இருவரும் நாளை சந்தித்து பேச இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்தார். அந்த அறிவிப்பு வந்த உடனேயே தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்வதாக இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்திக்க’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பிரதமரின் அப்பாய்ன்மென்ட் இதுவரை கிடைத்ததாக தகவல் இல்லை. எனவே தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
மு.க.ஸ்டாலினும் இதை உன்னிப்பாக கவனித்து வருகிறார். இந்தச் சூழலின் இன்று பகலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென செல்போனில் ஸ்டாலினை தொடர்பு கொண்டார். பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், ‘காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உங்களுடன் பேச விரும்புகிறேன். நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சந்திக்கலாம்’ என கூறியதாக தெரிகிறது.
மு.க.ஸ்டாலின் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார். அதன்படி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் நாளை தலைமைச் செயலகம் சென்று முதல்வர், துணை முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய பிரச்னை ஒன்றில் முதல்வரே எதிர்க்கட்சித் தலைவரை போனில் தொடர்புகொண்டு அழைத்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக கருதப்படுகிறது.