கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களில் பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதே சமயம், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன்.25) செவ்வாய்க்கிழமை காலை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியபோது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அ.தி.மு.க உறுப்பினர்கள் 3-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வெளிநடப்பும் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அ.தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார். அப்போது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
ஆளுநரை சந்தித்து மனு அளித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் மிக மோசமானது. ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. அது பலனளிக்கவில்லை. தற்போது நடைபெறும் கள்ளச்சாராய ரெய்டுகளை முன்கூட்டியே செய்திருக்கலாம். வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச வாய்ப்பு இல்லை.
ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம்தான். உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா? போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராய சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே நியாயமாக விசாரணை நடைபெறும்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“