ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்திப்பு நடத்தினர். கவர்னர் சொன்னது என்ன?
ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், டெல்லி சென்று திரும்பியிருக்கும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சகம் அழைப்பின் பேரிலேயே ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அங்கு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுனர் சந்தித்தார். பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் ஆளுனரை டெல்லியில் சந்தித்து பேசினர்.
தமிழ்நாடு திரும்பிய ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இன்று (ஏப்ரல் 4) இரவு 7.30 மணிக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு அப்பாய்ன்மென்ட் கொடுத்தார். இதையொட்டி மாலையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை தனது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ஆளுனர் டெல்லி செல்லும் முன்பு தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சரியாக 7.30 மணிக்கு ஆளுனரை சந்திக்க ராஜ் பவனுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சென்றனர். இவர்களுடன் அமைச்சர் ஜெயகுமாரும் சென்றார். மூவரும் ஆளுனரை சந்தித்து பேசினர். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் தரப்பில் சொன்ன தகவல்களை தமிழக அரசுடன் ஆளுனர் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
காவிரி பிரச்னை தொடர்பான தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு நிலவரம், சிறையில் 10 ஆண்டுகள் கழித்த கைதிகள் விடுதலை ஆகிய இரு விவகாரங்களும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுனருடன் சுமார் 30 நிமிடங்கள் முதல்வரும் துணை முதல்வரும் பேசினர். பின்னர் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘காவிரிப் பிரச்னை தொடர்பான போராட்டங்கள் குறித்து எங்களிடம் கவர்னர் கேட்டார். நாங்கள் சொன்ன விவரங்களைக் கேட்டு திருப்தி தெரிவித்தார். கோடை காலத்தையொட்டி குடிநீர் பிரச்னை குறித்தும் கேட்டார். உரிய பதில்களை கூறியிருக்கிறோம்’ என்றார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் அருகில் இருந்தனர்.