Advertisment

எடப்பாடி பழனிசாமி- மு.க.ஸ்டாலின் நேரடி விவாதம் நடக்குமா? மீண்டும் அழைப்பு விடுக்கும் முதல்வர்

Edappadi K Palaniswami: 'தைரியம் இருந்தால் ஸ்டாலின் விவாதத்துக்கு வரட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை’

author-image
WebDesk
New Update
எடப்பாடி பழனிசாமி- மு.க.ஸ்டாலின் நேரடி விவாதம் நடக்குமா? மீண்டும் அழைப்பு விடுக்கும் முதல்வர்

Edappadi K Palaniswami vs MK Stalin Corruption Charges Debate: ‘ஏன் பயப்படுறீங்க... உச்ச நீதிமன்ற வழக்கை முடித்துவிட்டு வரும்படி சொல்வது ஏன்? தைரியம் இருந்தால் விவாதத்திற்கு வாங்க ஸ்டாலின்’ என மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்டார். ‘எங்கள் மீது ஊழல் புகார் கூறும் ஸ்டாலின் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வரட்டும். திமுக ஆட்சியில் டெண்டரில் எப்படி ஊழல் நடந்ததுன்னு நான் கூறுகிறேன். துண்டுச் சீட்டு இல்லாமல் வந்து அவர் எழுப்பும் கேள்விகளுக்கு நான் பதில் கூறுகிறேன்’ என்றார் முதல்வர் பழனிசாமி. ‘துண்டுச் சீட்டு இல்லாமல் ஸ்டாலின் வரவேண்டும்’ என்பது எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனையாக இருந்தது.

இதற்கு வியாழக்கிழமை (ஜனவரி 7) அறிக்கை மூலமாக பதில் கொடுத்தார் ஸ்டாலின். அதில், ‘உங்கள் சம்பந்திக்கு டெண்டர் ஒதுக்கிய வழக்கிற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்று வைத்திருக்கிறீர்களே... அந்தத் தடையை மனு போட்டு முதலில் நீக்குங்கள். ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்கத் தடையில்லை என அமைச்சரவையைக் கூட்டி ஆளுனருக்கு தீர்மானம் போட்டு அனுப்புங்கள். இவற்றை செய்துவிட்டு வந்தால், விவாதத்திற்கு தயார்’ என இரண்டு நிபந்தனைகளை வைத்தார் ஸ்டாலின்.

எடப்பாடி தரப்பு ஒரு நிபந்தனையையும், ஸ்டாலின் தரப்பு 2 நிபந்தனைகளையும் வைத்ததால், இருவருமே விவாதத்தை நோக்கி நகரப் போவதில்லை என்கிற முடிவுக்கு அரசியல் பார்வையாளர்கள் வந்தனர். இருவரது சவால் பேச்சுமே வெற்று மேடைப் பேச்சுதான் என்பதாகவும் பேசப்பட்டது. இந்தச் சூழலில் முதல்வர் பழனிசாமி மீண்டும் நேரடி விவாதத்திற்கு தனது அழைப்பை உறுதி செய்திருக்கிறார்.

ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். பன்னீர்செல்வம் பூங்கா வளாகத்தில் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே மேடையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் சிலை, முதல்வர் கண்ணில் பட்டுவிடக் கூடாது என திரையை மறைத்திருந்தனர்.

அங்கு திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த முதல்வர், ‘நாங்க என்னென்ன திட்டங்கள் செஞ்சோமுன்னு புள்ளிவிவரமா சொல்றோம். ஆனா, ஸ்டாலின் எங்க ஆட்சியில எதுவுமே செய்யலைன்னு சொல்றாரு. மக்கள் மத்தியில் எங்கள் செல்வாக்கு உயர்ந்து வருவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தினமும் எங்கள் ஆட்சியைப் பற்றிப் பொய்களையே பேசி, பொய்யான அறிக்கைகளையே கொடுத்துவருகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கணும்னா, அது ஸ்டாலினுக்கு கொடுத்தாதான் சரியா இருக்கும்.

யார் தவறு செஞ்சாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துவருகிறோம். சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடந்துவருகிறது. சாதிச் சண்டை, மதச் சண்டை, அரசியல் அடாவடி இல்லாமல் அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்கிறது. சிறுபான்மை மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்காங்க. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அராஜகம், ரெளடித்தனம், கட்டப் பஞ்சாயத்து அதிகரிக்கும். தமிழகத்தையே பட்டா போட்டுவிடுவார்கள்.’ என்றார்.

இரவில் பெருந்துறை பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘நேற்றைக்கு நான் ஸ்டாலினுக்கு சவால்விட்டிருந்தேன். அதற்கு, ‘உச்ச நீதிமன்றத்தில் இருக்குற வழக்கை முடிச்சிட்டு வாங்க... நான் சவாலுக்கு தயார்’ என ஸ்டாலின் பதில் சொல்லியிருக்கிறார். அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் பயப்படுறீங்க... வாங்க, என்னென்ன துறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்குன்னு சொல்லுங்க, நான் பதில் சொல்றேன். டெண்டர் விட்ட வழக்கு விவகாரத்தில் விசாரிக்க ஒண்ணுமில்லைன்னு உச்ச நீதிமன்றமே சொல்லிடுச்சு. நீங்க அந்த வழக்கை முடிச்சிட்டு வாங்கன்னு சொல்றீங்க...

உச்ச நீதிமன்ற நீதிபதியைவிட நீங்க என்ன பெரிய அறிவாளியா? எங்கள் மீதுள்ள மக்களின் செல்வாக்கை ஸ்டாலினால் பொறுத்துக்க முடியலை. ஏதேதோ பொய்யாப் பேசிப் பார்க்குறாரு. உங்களின் பப்பு வேகாது. உங்க நாடகம் எடுபடாது. யார் உண்மை பேசுறாங்கன்னு மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. தைரியம் இருந்தால் ஸ்டாலின் விவாதத்துக்கு வரட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை’ என மீண்டும் தனது சவாலை உறுதிப்படுத்தினார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்தும் பதில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிஜமாகவே விவாதத்தை நோக்கி இருவரும் நகர்வார்களா? என்பதுதான் தெரியவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment