/indian-express-tamil/media/media_files/2025/04/18/QlJbQNcyB8rDZWLaU1Gj.jpg)
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்பாக, இரு கட்சியின் தொண்டர்கள் யாரும் பேசக்கூடாது என அக்கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி பிறப்பித்துள்ள உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே முழுவீச்சில் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான தி.மு.க மற்றும் பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க-வும் கட்சி பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதனிடையே, புதிதாக தொடங்கபட்டுள்ள நடிகர் விஜய்யின் த.வெ.க மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விலகியது. தற்போது இரு கட்சிக்கும் சமரசம் ஏற்பட்டு மீண்டும் ஓர் அணியில் 2026 தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர். இதனை உறுதிப் படுத்தும் வகையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும் அவர், 'எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் 'என்றும், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்' என்றும் தெரிவித்தார்.
ஆனால், இதனை மறுத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'தி.மு.க-வை வீழ்த்தவே பா.ஜ.க-வுடன் கைகோர்த்தோம்' என்றும், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது எப்போதும் இல்லை' என்றும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் தம்பிதுரை, 'தமிழ்நாட்டில் இதுவரை கிடையாது; இனிமேலும் கிடையாது' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க-வின் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “இது பற்றி தேசிய தலைமை தான் முடிவு செய்யும்” எனக் கூறினார். இப்டியாக ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு விதமாக கூற, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் விரிசல் விழப்போகிறது என மாற்று கட்சித் தலைவர்கள் விமர்சிக்க தொடங்கி விட்டனர்.
இதனைக் கவனித்த அ.தி.மு.க தலைமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ” கட்சியின் நிலைப்பாடு, கட்சியின் செயல்பாடு என கட்சி பற்றி பத்திரிகைகளுக்கோ, சமூக வலைத்தளத்திலோ, தொலைக்காட்சியிலோ பேசக்கூடாது. கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடு குறித்து கட்சித் தலைமை உரிய நேரத்தில் தெரிவிக்கும் எனவும், அதுவரை எதுவும் பேச வேண்டாம்" என்று அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பற்றி தொண்டர்கள் யாரும் பேசக் கூடாது என்று பா.ஜ.க மாநில நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். "அ.தி.மு.க கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்தக் கருத்தும் சொல்லக்கூடாது. தேர்தல் கூட்டணி குறித்து நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணியை பற்றி அமித்ஷா - இ.பி.எஸ் பேசி கொள்வார்கள்" என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.