நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்திருந்தாலும் பலமான எதிர்க்கட்சி என்ற அளவில்தான் தோல்வியை சந்தித்திருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியதையடுத்து, கூவத்தூர் சம்பவத்துக்குப் பிறகு சசிகலா சிறை செல்ல, முதல்வரான எடப்பாடி பழனிசாமி, கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மன்னார்குடி குடும்பத்தையே சமார்த்தியமாக கட்சியில் இருந்து வெளியேற்றினார். அதோடு, ஓ.பி.எஸ்.ஐயும் இணைத்துக்கொண்டார். ஓ.பி.எஸ்.க்கு துணை முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்து சரி கட்டினார். ஈ.பி.எஸ்-சின் 4 ஆண்டு கால ஆட்சியில் விமர்சனங்கள் இருந்தாலும் பெரிய எதிர்ப்புகள் இல்லாத அளவுக்கு பார்த்துக்கொண்டார். ஆட்சியிலும் கட்சியிலும் தன்னை நிரூப்பித்தார் எடப்பாடி பழனிசாமி.
அதே நேரத்தில், ஜெயலலிதாவால் 2 முறை முதல்வர் வாய்ப்பை பெற்ற ஓ.பன்னீர்செல்வம், எப்போதும் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னிறுக்கையில் இருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. ஓ.பி.எஸ் கட்சியில் என்னதான் நெருக்கடி கொடுத்தாலும், அவருடைய வாயாலேயே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்தார். தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ் போட்டி போட்டாலும், எல்லா தடைகளையும் தாண்டி ஈ.பி.எஸ். எதிர்க்கட்சி தலைவரானார். இப்படி, அதிமுகவில் மேலும், மேலும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார் ஈ.பி.எஸ். ஆனால், ஓ.பி.எஸ்-க்கு இருக்கிற ஒரே பிடிமானம், அவர் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பதுதான். ஓ.பி.எஸ்.சும் இதை வைத்துக்கொண்டு கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று செயல்படுகிறார்.
அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் அதிமுக இன்னும் சில ஆண்டுகள் கூட்டுத் தலைமையின் கீழ்தான் செயல்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில்தான், எடப்பாடி பழனிசாமி கூட்டுத் தலைமை கூடாது. கூட்டுத் தலைமை இருந்ததால்தான், கட்சியால் உடனடியாக உறுதியான முடிவு எடுக்க முடியாமல் போனது. அதனால், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அதிகாரமிக்க பொதுச் செயலாளராக ஒற்றைத் தலைமையாக தன்னை நிறுவிக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈ.பி.எஸ் அதிமுகவில் 2 நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உறுதியாக இருந்து வருகிறார். ஒன்று சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவானவர்களை நீக்குவது. மற்றொன்று ஓ.பி.எஸ்-க்கு ஆதரவானவர்களை ஓரம் கட்டுவது என்று இருந்து வருகிறார்.
இ.பி.எஸ்.க்கு முன்னதாக முந்திக்கொண்டு எப்படியாவது தென் மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய தலைவர்களை ஒருங்கிணைத்து கட்சித் தலைமையை பிடித்து விட வேண்டும் அல்லது தனது பிடி தளராமல் இதே நிலை நீடிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் முயற்சி செய்து வருகிறார். அது மட்டுமல்ல, சசிகலாவுடன் சென்றவர்களையும் அதிமுகவுக்குள் கொண்டுவர முயன்றுவருதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், ஓ.பி.எஸ்.சின் ஆதரவு தளம் தென் மாவட்டம் மட்டும்தான் என்பதை ஈ.பி.எஸ் நன்றாக உணர்ந்திருக்கிறார். மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் அதிமுக பலமாக உள்ளதோடு அப்பகுதி மாவட்ட பொறுப்பாளர்கள் ஈ.பி.எஸ்-க்கு ஆதரவாக உள்ளதால், தென் மாவட்டங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அந்தந்த மாவட்ட செயலாளர்களையும் அசைன்மெண்ட் கொடுத்து வளைத்து வருகிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர். அதோடு, ஈ.பி.எஸ் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வராக நிரூபித்தார். இனி வரும் 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக நிரூபிப்பார் என்கின்றனர்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர், ஓ.பி.எஸ் போல, தர்மயுத்தம் என்று கொந்தளிக்காமல், அமைதியாக அடக்கமாக இருந்து, முதல்வரான ஈ.பி.எஸ், மன்னார் குடி குடும்பத்தினரையே கட்சியில் தலையெடுக்க முடியாமல் வெளியேற்றி கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றி தன்னை நிரூபித்தவர். அவர் விரைவில் ஒற்றைத் தலைமையாக மாறுவார் என்று கூறுகின்றனர். ஆனால், ஓ.பி.எஸ் அவ்வளவு எளிதில் விடமாட்டார் என்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.