எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே அ.தி.மு.க தலைமை யார் என்ற மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். நீதிமன்றத் தீர்ப்புகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தன. தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது.
இதனிடையே, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
அதே போல, ஓ. பன்னீர்செல்வமும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதில், புலிகேசி நகர் மற்றும் கோலார் தொகுதி ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ் கையை விட்டு அ.தி.மு.க நழுவியுள்ள நிலையில், ஓ.பி.எஸ் தனது பலத்தைக் காட்டுவதற்கு வருகிற 24-ம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ. பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கியிருந்தாலும், ஓ.பி.எஸ் தொடர்ந்து அ.தி.மு.க கொடியை தனது வாகனத்தில் பயன்படுத்தி வருகிறார்.
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதன் மூலம், ஓ.பி.எஸ் நீக்கம் செல்லும்.. எனவே, அதிமுக கட்சிக் கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று எடப்பாடியின் ஆதரவாளரான பொள்ளாச்சி ஜெயராமன் காட்டமாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, மாநாட்டில் அ.தி.மு.க பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இ.பி.எஸ், “நாகரீகத்தை கடைப்பிடித்து, நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி அவர் நடந்துகொள்ள வேண்டும்…” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"