TN Assembly Session Governor RN Ravi | Edappadi K Palaniswami: தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது.
இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி நடைப்பெற்றது. காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதனை தொடர்ந்து, உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார். தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என்று கூறி உரையை 2 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
இதையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர், அவை முன்னவர் துரை முருகன், ஆளுநர் உரையை வாசிக்கவில்லை என்றாலும் அந்த உரையை அப்படியே முழுவதுமாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இ.பி.எஸ் விமர்சனம்
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் உரை குறித்து விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு தயாரித்த உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவுப் பண்டம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரை, உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்தான் கேட்க வேண்டும். ஆளுநருக்கு என்ன பிரச்சனை என்பதை அரசு, ஆளுநர், சபாநாயகரிடம் தான் கேட்க வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“