ஓராண்டு இபிஎஸ் அரசு #ietamil Exclusive : தோல்விகளை பட்டியல் இடுகிறார் ஜி.கே.வாசன்

ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடு குறித்து #ietamil Exclusive பேட்டிகளை பெற்றது. அதில் இபிஎஸ் அரசின் தோல்விகளை பட்டியலிட்டார் த.மா.கா. தலைவர் வாசன்.

ச.செல்வராஜ்

ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடு குறித்து #ietamil Exclusive பேட்டிகளை பெற்றது. அதில் இபிஎஸ் அரசின் தோல்விகளை பட்டியலிட்டார் த.மா.கா. தலைவர் வாசன்.

ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடுகள் சாதனையா, வேதனையா? என விவாதிக்கப்பட்டு வருகிறது. சரியாக கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி 16-ம் தேதி தமிழ்நாடு முதல் அமைச்சராக எடப்பாடி க.பழனிசாமி பொறுப்பேற்றார். ஒரு மாதமோ, இரண்டு மாதமோ என பேசப்பட்டு வந்த நிலையில் வெற்றிகரமாக ஒராண்டை கடந்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு!

ஓராண்டு இபிஎஸ் அரசு செயல்பாடுகள் குறித்து இங்கு விவரிக்கிறார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்… ‘கடந்த ஒரு வருடமாக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பெயரிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கத் தவறிய ஆட்சி இது!

தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறத் தவறிய ஆட்சி இது! விவசாயிகள் பிரச்னை உள்பட தமிழக மக்களின் நீண்ட நாள் முக்கியப் பிரச்னைகள் எதையும் தீர்க்கும் நடவடிக்கைகள் இல்லை. குறிப்பாக டெல்டா பகுதிக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறில் தீர்வு இல்லை. கோவை மண்டலத்தின் முக்கியப் பிரச்னையான பரம்பிகுளம்-ஆழியாறு தீர்க்கப்படவில்லை.

மீனவர்களின் பிரச்னை அதே சோகங்களுடன் தொடர்கிறது. நீட் தேர்வு குழப்பங்களால் மாணவர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். ஓ.என்.ஜி.சி. குழாய் பதிப்பு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு பிரச்னைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தின் நீண்ட நாள் திட்டங்களை வாதாடி, போராடி பெறக்கூடிய வலிமை மிகுந்த அரசாக இது இல்லை.

மாநில உரிமைகளை கேட்கவே இந்த அரசு தயங்குகிறது. காரணம், அதிமுக.வில் கடுமையான உட்கட்சி குழப்பங்கள்! 234 உறுப்பினர்களையும் கணக்கிட்டால், சட்டமன்றத்தில் இந்த அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. அதுவும் பலவீனமான அரசாக இருக்க ஒரு காரணம்!

தமிழகத்திற்கு இந்நேரம் எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்க வேண்டும். ஆனால் வருமா? என்பதே தெரியவில்லை. மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் மக்களை அலைக்கழிக்கின்றன. எனவே ஓராண்டு கால இந்த ஆட்சியை, மக்கள் நம்பிக்கையை பெறத் தவறிய ஆட்சியாகவே கருதுகிறேன்’ என்றார் ஜி.கே.வாசன்.

‘இந்த ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள்?’ என ஜி.கே.வாசனிடம் கேட்டதற்கு, ‘மக்கள் நம்பிக்கையை பெறாத அரசுக்கு நான் எப்படி மதிப்பெண்கள் கொடுப்பது?’ என முடித்தார் வாசன்.

 

 

×Close
×Close