சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து உடைத்துப் பேசியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருப்பது குறித்து, ஓ.பி.எஸ் கருத்து குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ஓ. பன்னீர்செல்வம் பேசுவது ஜோக்காக இருக்கிறது. சட்ட ரீதியாக அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஏதோ அவர் விரக்தியின் விளிம்பில் பேசிக்கொண்டிருக்கிறார். யார் வேண்டுமானாலும் கோர்டில் வழக்கு போடலாம். ஆனால், எது சரி என்பதை நீதிமன்றம் அளிக்கும். அது நீதிமன்றத்தில் இருப்பதால் முழுமையான கருத்து சொல்ல முடியாது. நாளைக்கு கோர்டில் வழக்கு வர இருக்கிறது.
பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது. எப்போது முடிவாகும்? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் அந்த பிரச்னைக்கே வரவில்லை. நீங்களே கற்பனையைக் கட்டி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை. பாரதிய ஜனதா பா.ம.க.வுடன் பேசிக்கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம், நீங்களாக கற்பனை பண்ணி, பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் ஹேசியங்களாக போடுவதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் கூட்டணி பேசுகிறபோது உங்களை எல்லாம் அழைப்போம். தெரிவிப்போம்.
தே.மு.தி.க.வுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்துகொண்டிருக்கிறோம். அதில் எந்த மாற்றும் கிடையாது. பா.ம.க.வோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றபோது உங்களை அழைத்து நிச்சயமாகத் தெரிவிப்போம்.
பா.ஜ.க ஒரு மிகப்பெரிய கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏனென்றால், 8 கட்சிகள் அவர்களிடம் கூட்டணி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு கட்சிக்கு ஒரு நிலைப்பாடு உண்டு. அந்தக் கட்சியைத்தான் நீங்கள் போய் கேட்க வேண்டும். என்னைக் கேட்டால், நான் என்ன சொல்வேன். எங்கள் கட்சியைப் பற்றிக் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். அடுத்த கட்சியைப் பற்றி நான் பேசுவது சரியல்ல.” என்று கூறினார்.
மூன்றாவது கூட்டணி அமைவது அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க ஆட்சியில் இருக்கின்றபோது நிறைய திட்டங்களை நிறைவேற்றித் தந்திருக்கிறோம். அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களின் உரிமையைக் காப்பதற்காக, போராடியிருக்கிறார்கள். வென்றிருக்கிறார்கள். காவிரி நதி நீர் பிரச்னை அதற்கு உதாரணம். அதே வேளையில், தி.மு.க-வைச் சேர்ந்த, கூட்டணியுடன் 38 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்காக என்ன குரல் கொடுத்திருக்கிறார்கள். எதுவுமே இல்லை. எல்லாமே பேசுவதோடு சரி. அந்த ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள். எதுவுமே இல்லை. அதனால், மீண்டும் தேர்தல் நடக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுக்கு வாக்களித்தால் அது வீண்தான். ஏனென்றால், ஏற்கனவே ஐந்தாண்டு காலமாக பார்த்துவிட்டார்கள். தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கையை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு ஓட்டுபோட்டு என்ன பிரயோஜனம்.
அதே வேளையில், அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2014-ல் இருந்து 2019 வரை இருக்கிறார்கள். பல்வேறு பிரச்னைகள் தமிழ்நாட்டில் வரும்போது, தமிழ்நாட்டு மக்களுக்காக, ஓட்டு போட்ட மக்களுக்காக அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்பட்டது” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.