பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்ட்டர் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி அவருடைய வீட்டுக்கு வெளியே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்தன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் இந்த படுகொலை சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்களை முன்வைத்து வருகின்றனர். கொலையாளிகளுக்கு பின்னணியில் வேறு சில கும்பல் இருக்கலாம் எனவும், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக வேறு யாராவது உதவி இருக்கக் கூடும் எனவும் கூறி வருகின்றனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்ட 11 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 11-ம் தேதி 11 பேரையும் காவலில் எடுத்த செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடத்தை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், தப்பிச் சென்ற திருவேங்கடம் மாதவரம் ஆடுதொட்டி அருகே தகரக் கொட்டாயில் பதுங்கியிருந்துள்ளார். அப்போது அவரைப் பிடிக்க சென்ற போலீசார் சுற்றி வளைக்கும்போது ரவுடி திருவேங்கடம் அங்கே பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலிசாரை நோக்கி சுட்டுள்ளார். தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யாரைக் காப்பாற்ற திருவேங்கடம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இந்த சுட்டுகொல்லப்பட்ட நபர் திருவேங்கடம் என்று கருதுகிறேன். அவர் சரணடைந்திருக்கிறார். சரணடைந்தவரை வேகவேகமாக அதிகாரிகள் அவரை அதிகாலையிலேயே அழைத்துச் சென்றதாக ஊடகத்தின் செய்தியின் வாயிலாகப் பார்த்து நான் தெரிந்துகொண்டேன். அந்த செய்தியின் வாயிலாக நான் அறிந்துகொண்டது, ஏன் அவரை அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு அங்கே சென்று அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்து சென்றதாகக் கூறுகிறார்கள். அப்படி அழைத்துச் செல்பவரை கைவிலங்கு போட்டுதான் அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு கொலைக் குற்றவாளி அப்படிதான் அழைத்துச் செல்லப்பட வேண்டும். அப்படித்தான் கைது செய்யப்பட வேண்டும் என்று விதி இருப்பதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கின்றபோது பாதுகாப்போடு சென்றிருக்க வேண்டும். அவர் எங்கே ஆயுதத்தை மறைத்து வைத்து இருக்கின்றாரோ, அந்த ஆயுதத்தை கைப்பற்றுகின்றபோது, இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர், இந்த கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகத்துக்குரியவர்கள், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவருடைய உறவினர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் தெரிவித்து வருகின்றனர். அந்த வேளையில், இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றிருப்பது மேலும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவிதுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 14, 2024
காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை… pic.twitter.com/NhAMFmI3A0
மேலும், ரவுடி திருவேங்கடம் போலிசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?
கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?
யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்!
இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.