ரயில்களுக்கான கட்டணத்தில் பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளது என்ற செய்தியைக் கேட்ட மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்று கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க ஆட்சியில் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க தோன்றவில்லையா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள பயணிகளின் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது என்றும், ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியிருக்கிறது என்றும், ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல், சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், ரயில்களுக்கான கட்டணத்தில் பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியைக் கேட்ட மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்று கூறும் பொம்மை முதலமைச்சரே...
கடந்த நான்காண்டுகளாக உங்களது ஏமாற்று மாடல் ஆட்சியில் ஆயிரக் கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு, பதிவுக் கட்டணங்கள் உயர்வு என்று அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா?
உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?
தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது 'சாத்தான் வேதம் ஒதுவது போல்' உள்ளது.” என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.