Advertisment

மக்கள் வரிப்பணத்தில் விளையாடுகிறார் விளையாட்டு அமைச்சர்; எதற்கு இப்போது கார் பந்தயம்? - இ.பி.எஸ் கேள்வி

விளையாட்டுத்துறை அமைச்சர் மக்கள் பணத்தில் விளையாடுகிறார் என்று விமர்சனம் செய்துள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து மிகுந்த நகரின் மையப்பகுதியில் இப்போது எதற்கு ஃபார்முலா கார் பந்தயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi K Palaniswami

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

விளையாட்டுத்துறை அமைச்சர் மக்கள் பணத்தில் விளையாடுகிறார் என்று விமர்சனம் செய்துள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து மிகுந்த நகரின் மையப்பகுதியில் இப்போது எதற்கு ஃபார்முலா கார் பந்தயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

கார் பந்தயம் தேவையென்றால் ஜெயலலிதா அமைத்து கொடுத்த மைதானத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது தானே? போக்குவரத்து மிகுந்த நகரின் மையப் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தேவையா? என்று அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதிகளிலிருந்து ரூ. 72.85 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட 4 வகுப்பறை கட்டடங்கள், கான்கிரீட் சாலை, போர்வெல் சின்டெக்ஸ் டேங்க் உட்பட பல்வேறு திட்டப்பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ( ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதைப் பலமுறை சுட்டிக்காட்டியும் தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருள் விற்பனையை தடுக்க முடியாத திறமையற்ற முதல்வராக ஸ்டாலின் இருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் வீணாகி வருகிறது.” என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, ரூ. 42 கோடியில் கார் பந்தயம் நடத்த திமுக அரசு தயாராகி வருகிறது. கார் பந்தயம் நடத்த இருங்காட்டுக் கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மைதானம் இருக்கும்போது, அதை விட்டுவிட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளின் மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூ.42 கோடி செலவில் கார் பந்தயம் நடத்த தி.மு.க அரசு துடிக்கிறது.” என்று கூறினார்.

மேலும், “மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறார்கள். விளையாட்டுத் துறை அமைச்சர், மக்கள் வரிப்பணத்தில் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறார். மக்களின் மனதை புரிந்து கொண்டு அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அரசாங்கம் ஊதாரித்தனமாக மக்கள் பணத்தை செலவிடுவதை கடுமையாகக் கண்டிக்கிறேன்.” என்று உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க அரசு தவறிவிட்டது. விசைத்தறி தொழில் நசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க ஆட்சியில் அனைத்து தொழில்களும் நசிந்துவிட்டன. மக்கள் பணத்தை நலிவடைந்த தொழில்களை சீர் செய்ய பயன்படுத்தாமமல் தேவையின்றி வீணடிக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை தி.மு.க அரசு முடக்கிவிட்டது. 

ரூ.565 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்ட மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம், ரூ.1652 மதிப்பில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு அவினாசி திட்டம் என மக்கள் பயன்பெறக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கிவிட்டார்கள். முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை தொடர்வதுதான் நல்ல அரசாங்கமாக இருக்க முடியும். அ.தி.மு.க அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக ஆட்சியாளர்களுக்கு ஏன் மனத்தடை? தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி குப்பை வரி என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க அரசாங்கம் மக்கள் அரசாங்கம். அ.தி.மு.க ஆட்சி மீண்டும் மலருவதற்கு நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment