‘ஆன் லைன்’ டென்டரில் ஊழலுக்கு வாய்ப்பே இல்லை : எடப்பாடி பழனிசாமி உறுதி

ஆன் லைன் டென்டரில் ஊழலுக்கு வாய்ப்பே இல்லை என முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி கூறினார். டிடிவி தினகரன் அணிக்கு பதிலடி கொடுத்தார்.

ஆன் லைன் டென்டரில் ஊழலுக்கு வாய்ப்பே இல்லை என முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி கூறினார். டிடிவி தினகரன் அணிக்கு பதிலடி கொடுத்தார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் திருக்கழுகுன்றத்தில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நடிகர் கமல்ஹாசன் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் புரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை. விஜயகாந்த் நிலைமை இப்போது எப்படி இருக்கிறதோ அதே போல் கமல் நிலையும் மாறும். சினிமாவில் நடித்து விட்டு நல்லாட்சி புரிவோம் என இவர்கள் எல்லாம் வருகிறார்கள். முதலில் அவர்களுக்கு அரசின் திட்டம் என்னென்ன என்று தெரியுமா? எத்தனையோ புதிய கட்சிகள் வந்தாலும் மக்கள் மனதில் அ.தி.மு.க. தான் நிலைத்து நிற்கும்.

சிறுவயதில் இருந்தே எம்.ஜி.ஆர். கடுமையான பசி, வறுமையால் வாடியவர். எனவே தமிழகத்தில் சிறு வயது குழந்தைகள் வறுமையால் வாடக்கூடாது என்பதற்காகவும், அப்படி வாடும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்பதாலும் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

அப்படி கொண்டு வருகின்றபொழுது, தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர் கிண்டலடித்தார். உங்களுக்கு எங்கே நிதி இருக்கிறது என்று கேட்டார். அப்போது எம்.ஜி.ஆர். அழகாகச் சொன்னார். சத்துணவுத் திட்டத்திற்கு நிதி இல்லாவிட்டாலும், இந்த ராமச்சந்திரன் வீதிவீதியாக பிச்சையெடுத்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று சொன்னார், நிறைவேற்றிக் காட்டினார்.

இந்த சிறந்த திட்டத்தை பின்பற்றி பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது தான் ஒரு தலைவருக்கு இருக்கின்ற பெருமை. தான் இறந்த பிறகு அவர் செய்த சாதனைகள் உயிரோட்டம் உள்ளவைகளாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னால், அவர் இந்த மக்களுக்கு செய்த சாதனை திட்டங்கள்.

இன்றைக்கு, கொச்சைப் படுத்தியவர்களெல்லாம் இன்னொன்றையும் சொன்னார், பிஞ்சு வயதிலே பிச்சையெடுக்க வைத்து விட்டார் என்று கிண்டலடித்தார்கள். அதே திட்டத்திற்கு முட்டை போட்டவர்களும் இவர்தான். ஒரு எதிர்க்கட்சி அப்பொழுது விமர்சனம் செய்தார்கள். எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டம் சிறந்த திட்டம் என்று அவரே ஏற்றுக் கொண்டார், அதுதான் பெருமை.

வசதியானவர்களை போல ஏழைகளும் வாழ வேண்டும் என ஜெயலலிதா இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டங் களை கொண்டு வந்தார். சமீபத்தில் என்னைப் பற்றி ஒருவர் பெரிய பட்டியல் வெளியிட்டார். அதில் டெண்டர் விடுவதில் ஊழல் செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். அவர் புதிய கண்டுபிடிப்பு போல அந்த பட்டியலை வெளியிட்டார். ஆனால் அது போன்ற எந்த ஊழலும் நடக்கவில்லை.

அனைத்து டெண்டர் பணிகளும் முறையாக ஆன்லைன் மூலம் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் யார் வேண்டுமானாலும் டெண்டர் எடுக்கலாம். ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்படுவதால் அவர் சொல்வது போல் எந்த ஊழலும் நடக்கவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் கூறுபவர்கள் வியாபாரிகள்.

பலபேர் கனவு கொண்டிருக்கிறார்கள், எப்படியாவது கட்சியை உடைத்து விடலாம், இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்று அந்த கனவும் பலிக்கவில்லை. அம்மாவினுடைய ஆத்மாவும், புரட்சித்தலைவர் ஆத்மாவும் நமக்கு பக்கபலமாக நின்று இந்த ஆட்சியையும், கட்சியையும் கட்டிக் காத்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு ஊர்ஊராக புறப்பட்டிருக்கின்றார். கட்சிக்கெல்லாம் பொறுப்பாளர்கள் நியமித்திருக்கிறார்.

தேர்தல் கமி‌ஷனே நீங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று சின்னத்தையும், கொடியையும் நமக்கு கொடுத்துவிட்டார்கள், கட்சியையும் கொடுத்து விட்டார்கள். இப்பொழுது எந்த கட்சியை வைத்துக் கொண்டு பொறுப்பிலிருக்கிறார் என்று தெரிய வில்லை, பலருக்கு பதவிகளை கொடுக்கிறார். தலையே இல்லாத உடம்பு மாதிரி.

இன்றைக்கு கட்சி முழுவதும் நம்மிடத்தில் இருக்கிறது. அவர் கட்சியே இல்லாமல் பொறுப்பிலே இருக்கிறார் என்று சொன்னால், இந்தியாவிலே டி.டி.வி.தினகரன் இருக்கும் கட்சிதான், அவர் சுயேச்சை எம்.எல்.ஏ., கட்சி கிடையாது. வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய கட்சியை உடைத்து, இன்றைக்கு பலவீனப்படுத்தி எதிரிகளிடத்திலே கொடுக்க வேண்டு மென்பதுதான் அவருடைய எண்ணம். அதெல்லாம் இன்றைக்கு முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஓராயிரம் டி.டி.வி.தினகரன் பிறந்து வந்தாலும், அ.தி.மு.க.வை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது.

வெற்றிவேல் என்பவர் யார்? அ.தி.மு.க.வினுடைய வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அம்மா வீட்டிலிருந்து ஒருவர் மூலம் கொல்லை புறமாக உள்ளே வந்திருக்கிறீர்கள். அவர்கள் மூலமாக நீங்கள் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. பதவி வாங்கினீர்கள், இந்த இயக்கத்திற்காக நான் ஏழுமுறை சிறைக்கு சென்றிருக்கிறேன், நீங்கள் எத்தனை முறை சென்றிருக்கிறீர்கள்? நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

இன்றைக்கு 20 ரூபாய் நோட்டு, ஹவாலா திட்டம், எவருக்குமே இந்த மாதிரி ஐடியா வந்ததில்லை. நான் ஒன்பது முறை தேர்தலில் நின்றிருக்கிறேன், இப்படிப் பட்ட நிலையை பார்த்த தில்லை. 14 வருடம் மாவட்ட செயலாளராக இருக்கிறேன். ஆனால் இந்த நிலை வரவேயில்லை. இன்றைக்கு மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை பெற்றுவிட்டார்கள்.

20 ரூபாய் ஹவாலா பணத்தை வைத்து வெற்றி பெற்ற வரை பின்னால் வைத்துக் கொண்டு இந்த ஆட்சியைப் பற்றி குறை கூறிக் கொண்டிருக்கிறீர்கள். தங்க தமிழ்ச் செல்வன் அம்மா இருக்கும் பொழுது நான் தோற்றதற்கு காரணம் டி.டி.வி. தினகரன் என்று சொன்னார்.

இன்றைக்கு கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்கு கொள்கை பரப்புச் செயலாளர். இந்த ஆட்சியின் மீது தவறான பொய்யான தகவல்களை மக்களிடத்திலே தர வேண்டும் என்று இப்படி கூறுகிறார்கள். உண்மை உறங்காது, நிச்சயமாக ஒருநாள் உண்மை வெல்லும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரன் 20 ரூபாய் நோட்டை போட்டு ஹவாலா பாணியில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இப்போது ஆர்.கே.நகர் தொகுதி பக்கம் அவர் திரும்பி கூட பார்க்க முடியாது.

தி.மு.க. என்று சொன்னால் ஒன் வே டிராபிக் தான், எல்லாமே வீட்டிற்குதான் போகும். ஆனால் அ.தி.மு.க. மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்ற இயக்கம். எம்.ஜி.ஆர் கொடுத்து, கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர். ஆகவே தான், அந்த வழியிலே வந்த கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்றைக்கு மக்களுக்கு வாரிவாரி வழங்குகின்றனர். இவ்வாறு பேசினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close