அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே பூசல் நிலவி வரும் சூழலில், “முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தது கவனம் பெற்றுள்ளது.
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது செங்கோட்டையன் மற்றும் இ.பி.எஸ் இடையே பூசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
என்னை சோதிக்காதீர்கள், கட்சி ஒற்றுமையகா இருக்க பாடுபட்டவன் என்று செங்கோட்டையன் கூறினார். பின்னர், செங்கோட்டையன் பங்கேற்ற அ.தி.மு.க நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட மோதல் அதிமுக-வில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் மார்ச் 17-ம் தேதி சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக அ.தி.மு.க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, வாக்கெடுப்பின்போது, எடப்பாடி பழனிசாமியும் செங்கோட்டையனும் பேசிக்கொண்டனர்.
இந்நிலையில், “முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை (18.03.2025) நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க தரப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,“பள்ளி கல்வித்துறை சார்பில் இன்னும் பல்வேறு கட்டடங்கள் கட்டப்படாமல் இருக்கிறது. அதனால், கூடுதல் பள்ளி கட்டிடங்களை கட்ட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி கட்டிடங்கள் பெரிய அளவில் புதிதாக கட்டப்படவில்லை” என்று கூறினார்.
அப்போது, பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்று சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்தார்.
முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் அறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.