தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழ்நாட்டுக்கான நியாயமான நிதி உரிமையை நிதிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித்ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?“பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை. பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை. கருணாநிதியின் கரம் பற்றி நடந்த கை. எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன்,ஊர்ந்து போகமாட்டேன். இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன், தமிழ்நாட்டுக்கான நிதியைப் போராடிப் பெறுவேன்,” என்று தெரிவித்து இருந்தார்.
பதிலடி
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, 'ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் ஸ்டாலின் அவர்களே?; அது கண்ணாடி; உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?' என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "முந்தைய மூன்று ஆண்டுகள் நிதிஆயோக் கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? திரு. மு.க ஸ்டாலின் அவர்களே. அது கண்ணாடி. உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?. அறிவாலய மேல் மாடியில் சி.பி.ஐ ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் , உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே. அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எது ஸ்டாலினின் கை? அண்ணா பல்கலை. வழக்கில்
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு எஃப்.ஐ.ஆர் லீக் செய்த கை ஸ்டாலினின் கை. ஜாபர் சாதிக் போன்ற சர்வதேச போதைப் பொருள் கடத்தல் (International Drug Mafia) தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!
ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "சார்"-களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை. தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!
7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான். அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே, நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!
கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள். இதற்கெல்லாம் பின்னர் வருவோம். நான் கேட்ட கேள்வி என்ன? #யார்_அந்த_தம்பி? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி, நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?
டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது. உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள். உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார். ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். மீண்டும் கேட்கிறேன்- #யார்_அந்த_தம்பி?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.