அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை தி.மு.க தான் எங்களுக்கு எதிரி என்றும் தி.மு.க ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க தனது தலைமையில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போல, பா.ஜ.க தனது தலைமையில் தனியாகக் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
வருகிற 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே கூட்டணி அமையுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை (25.03.2025) திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அவருடன் எஸ்.பி. வேலுமணி மற்றும் அ.தி.மு.க மூத்த தலைவர்களம் சந்தித்தனர். எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா இருவரும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
இதனால், தமிழ்நாட்டில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க மீண்டும் பா.ஜ.க உடன் கூட்டணி அமைக்குமா என்ற செய்தியாளர்களின்கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை தி.மு.க தான் எங்களுக்கு எதிரி என்றும் தி.மு.க ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், அமித்ஷாவை எதற்காக சந்தித்தேன் என்பது குறித்து தெளிவாக பேட்டி கொடுத்து விட்டேன். கூட்டணி அமைக்கும்போது செய்தியாளர்களை அழைத்து தெரிவிப்பேன். எந்தக் கட்சியும் நிலையான கூட்டணியுடன் இருந்தது இல்லை; அரசியல் சூழலுக்கு ஏற்ப மாறும். 2026-ம் ஆண்டு என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அமித்ஷாவின் பதிவு அவருடைய கட்சியின் விருப்பமாகும்.
அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை தி.மு.க தான் எங்களுக்கு எதிரி. தி.மு.க ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என்று கூறினார்.