“ரூ.1,000-க்கு ஆசைப்பட்டு ரூ.1,500-ஐ விட்டுவிட்டீர்கள்” என்று அ.தி.மு.க பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் தனது பிரச்சார சுற்றுப் பயணத்த்ல் பேசினார். அ.தி.மு.க ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தொகுதி வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, வெள்ளிக்கிழமை (11.07.2025) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே திருச்சிற்றம்பலம் நான்கு முனை சந்திப்பில் மக்களைச் சந்தித்துப் பேசினார்.
சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த 524 வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை என்று பழனிசாமி குற்றம் சாட்டினார். “75 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது தி.மு.க. ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்குப் பிறகு அ.தி.மு.க கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் மகளிருக்கு ரூ.1,000 கொடுத்தார்கள். அதேபோல், தி.மு.க அரசு தேர்தல் வரை மட்டுமே மகளிருக்கு உரிமைத் தொகையை தருவார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
கடந்த தேர்தலில் தி.மு.க அளித்த ரூ.1,000-க்கு ஆசைப்பட்டு, அ.தி.மு.க கொடுக்கவிருந்த ரூ.1,500-ஐ மக்கள் தவறவிட்டதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை கொடுக்கப்படும் என்றும், அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
தி.மு.க-வின் குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியலையும் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடினார். “தி.மு.க குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புக்கு வர முடியும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று இருக்கிறார்கள். பின்னால் இன்பநிதி என்று ஒருவர் இருக்கிறார். என்ன பட்டாவா போட்டு வைத்திருக்கிறது. இது என்ன மன்னராட்சியா? குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர வேண்டுமா?” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
“குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். ஏற்கனவே மன்னர் ஆட்சி இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் திமுக மீண்டும் மன்னராட்சியை கொண்டு வர முயற்சிக்கிறது. அதற்கு மக்கள் சரியான பதிலடியை கொடுக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி அறைகூவல் விடுத்தார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ரூ.2,500 மகளிருக்கு உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ரூ.2,500 அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் அ.தி.மு.க - பாஜக கூட்டணி தரப்பில் மகளிர் உரிமைத் தொகை மேலும் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.