/indian-express-tamil/media/media_files/2025/09/16/eps-speech-in-meeting-2-2025-09-16-06-14-26.jpg)
அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அ.தி.மு.க சார்பில் தி. நகர் சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம், கங்கை அம்மன் கோயில் தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். Photograph: (x/ AIADMKITWINGOFL)
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டுமென்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விதித்திருந்த 10 நாள் காலக்கெடு திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.
இந்த சூழலில், உட்கட்சிப் பிரச்னைகள் குறித்துப் பேசியுள்ள பழனிசாமி, அ.தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
செங்கோட்டையன், செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியை பழனிசாமி தொடங்க வேண்டும் என்றும், அதற்காக 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்தை அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
செங்கோட்டையன் இப்படி அறிவித்த மறுநாளே அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதையடுத்து, டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்துப் பேசியதாக தகவல் வெளியானது.
இதைத் தொடந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செப்டம்பர் 16-ம் தேதி டெல்லி செல்கிறார் என்ற தகவல் வெளியானது. மேலும், டெல்லி பயணத்தில், அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அ.தி.மு.க சார்பில் தி. நகர் சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம், கங்கை அம்மன் கோயில் தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்தி எதிா்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தியவா் அண்ணா. ஆட்சி மொழியாக தமிழ், தொடா்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழி கொள்கையை அறிமுகப்படுத்தினாா். அடித்தட்டு மக்களுக்காக சிந்தித்து திட்டங்களைச் செயல்படுத்தினாா். அவரது மறைவுக்கு பிறகு அண்ணாவின் கனவை நனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆா் அமல்படுத்தினாா். கல்விக்கு முன்னுரிமை கொடுத்தாா்.
அதைத்தொடா்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்ததும் அ.தி.மு.க அரசுதான். தமிழகத்தின் உயா்கல்வி வளா்ச்சிக்கு அதிமுகதான் காரணம்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “மழை காரணமாகத்தான் தருமபுரி மாவட்ட சுற்றுப்பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. உட்கட்சிப் பிரச்னை குறித்து அமித்ஷாவுடன் பேச டெல்லி செல்கிறார் என செய்தி வெளியானது. அ.தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானம்தான் முக்கியம். இம்மி அளவு கூட அதனை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று கூறினார்.
மேலும், "சில பேர் கூலிப்படைகளை வைத்து ஆட்டம் போடுகிறார்கள். அந்தக் கூலிப்படைகள் யார் என்று அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களுக்கு விரைவில் முடிவுக்கட்டப்படும்" என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிலர் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கப் பார்த்தார்கள், அவர்களை மன்னித்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம். ஆனாலும், திருந்தவில்லை, மீண்டும் அ.தி.மு.க. அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். இன்னொருவர் 18 சட்டமன்ற உறுப்பினர்களைக் கடத்திக்கொண்டு போனார். இவர்களை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
"எனக்கு உறுதியான எண்ணமும் மனநிலையும் உண்டு, எதற்கும் அஞ்ச மாட்டேன், என்னை யாரும் மிரட்ட முடியாது" என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, "மத்தியில் இருந்து யாரும் என்னை அச்சுறுத்தவில்லை. நமக்கு நல்லதுதான் செய்தார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை கபளீகரம் செய்யப் பார்த்தார்கள், ஆட்சியை கவிழ்க்கப் பார்த்தார்கள். அவர்களிடம் இருந்து கட்சியை காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியிலிருந்தவர்கள்தான். அந்த நன்றியோடு நாங்கள் இருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
பிரிந்து சென்றவர்களைச் சேர்ப்பது குறித்து திட்டவட்டமாகப் பேசிய அவர், "கட்சிக்கு உழைப்பவர்களைத்தான் அனுசரித்துச் செல்ல முடியும். வெற்றுப் பேச்சு பேசுபவர்களை அனுசரித்துச் செல்ல முடியாது. சிலர் அ.தி.மு.க.வை அடமானம் வைக்கப் பார்க்கிறார்கள். அதில் இருந்து காப்பாற்ற அனைவரும் துணிந்து நிற்க வேண்டும். அ.தி.மு.க.வுக்குத் துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். கட்சிக்குத் துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் இறைவன் மன்னிக்க மாட்டான்" என்றார்.
மேலும், ஊடகங்களில் அ.தி.மு.க. செய்தியை 4 நிமிடங்கள் மட்டுமே காட்டுவதாகவும், முக்கியத்துவம் இல்லாத செய்திகளை நாள் முழுவதும் காட்டுவதாகவும் கூறி, நடிகர் விஜய்யின் பிரசாரம் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.