“எந்த கொம்பனாலும் அ.தி.மு.க-வை கபளீகரம் செய்ய முடியாது. தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணி காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றமடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) நடைபெற்ற. இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க இத்துடன் முடிந்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அ.தி.மு.க-வின் வெற்றிக்கு இங்கு குவிந்திருக்கும் சிப்பாய்களை பாருங்கள். தி.மு.க-வுக்கு ஏன் கவலை? இங்குள்ள ஒவ்வொருவரும் 25 வாக்குகளை அ.தி.மு.க வேட்பாளருக்கு பெற்று கொடுக்க வேண்டும். நமக்கு கூட்டணி பலமானதாக அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம்," என்று தொண்டர்களிடையே உற்சாகமாகப் பேசினார்.
பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து விளக்கமளித்த அவர், "முதற்கட்டமாக பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து ஸ்டாலின் பதற்றமாக இருக்கிறார். அ.தி.மு.க யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? பொன் விழா கண்ட கட்சி இது. பயம் வந்துவிட்டது ஸ்டாலினுக்கு. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததன் நோக்கம், நமது வேட்பாளருக்கு வாக்குகள் சிதறாமல் கிடைக்க வேண்டும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே கூட்டணி வைத்துள்ளோம். அதிமுகவை பா.ஜ.க கபளீகரம் செய்துவிடும் என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க பொன் விழா கண்ட கட்சி," என்று ஆவேசமாக பதிலளித்தார்.
"10 தோல்வி பழனிசாமியா? எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது," என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.