தி.மு.க எம்.எல்.ஏ-வின் மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்துள்ளதை இந்த அரசே செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட கேவலமான அவல ஆட்சி தேவையா என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்” என்று பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
“ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைக்கு போனால், அவர்களுடைய கிட்னியை எடுத்துக்கொள்கிறார்கள். லட்சக் கணக்கில் விற்கிறார்கள். ஆனால், அந்த ஏழைக்கு குறைந்த பணம் தான் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட தி.மு.க-வின் அவல ஆட்சி தேவையா?” என்று எடப்பாடி பழனிசாமி மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஆராய்ந்து அலசிப்பார்த்து விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவர்களின் உள்ளம் குளிர்கிற வரை சிறப்பான ஆட்சி கொடுத்தது அ.தி.மு.க அரசாங்கம். ஆனால், இன்றைக்கு தி.மு.க-வில் கிட்னியைத் திருடுகிறார்கள். இந்த ஆட்சியில் இன்றைக்கு யாரும் மருத்துவமனைக்கு போகமுடியாது போல இருக்கிறது.
ஆனால், இன்று இந்த அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாமக்கல்லில் கிட்னி திருடியிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போய் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதில் திமுக சம்பந்தப்பட்ட தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெரம்பலூர், சிதார் மருத்துவமனை திருச்சி ஆகிய மருத்துவமனைகளில் பொதுமக்கள் நலன் கருதி சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று மருத்துவக்கல்வி மருத்துவமனை இயக்குநர் ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். இந்த மருத்துவமனை மண்ணச்சநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கதிரவனுடையது. மக்கள் இவர்களை எல்லாம் நம்பி ஓட்டுபோட்டால், உடலில் உள்ள உறுப்புகளை எல்லாம் எடுத்து விற்றுவிடுவார்கள். இப்படிபட்ட ஆட்சி தேவையா?
ஏழை எளிய ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அவர்கள் மருத்துவமனைக்கு போனால், அவர்களுடைய கிட்னியை எடுத்துக்கொள்கிறார்கள். லட்சக் கணக்கில் விற்கிறார்கள். ஆனால், அந்த ஏழைக்கு குறைந்த பணம் தான் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட அவல ஆட்சி தேவையா?
அ.தி.மு.க ஆட்சியில் இரண்டு கைகளும் இல்லாமல் வந்து சந்தித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு தொழிலாளி என்னை வந்து சந்தித்தார். அவருக்கு இரண்டு கையும் பொருத்தப்பட்டது. ஆனால், தி.மு.க ஆட்சியில், காலோடு போனால் கால் இல்லாமல் வருகிறார்கள், உயிரோடு போனால், உயிரில்லாமல்தான் வருவார்கள். அப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தி.மு.க ஆட்சி” என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.