அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆடியோ வெளியிட்டு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார், அது நடக்காது என்று கூறினார்.
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் வெள்ளிகிழமை (ஜூன் 4) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். “அதிமுக அரசுதான் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது. கோதாவரி-காவிரி திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் அப்போதைய அமைச்சர்கள் பேசினார்கள். கோதாவரி-காவிரி திட்டத்தை பரிசீலிப்பதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக் கூடாது; முடிவை உடனே தெரிவித்தால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்” என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசிவரும் ஆடியோவை வெளியிட்டு வருகிறார். இது குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த பழனிசாமி, “ஒன்று சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை. இரண்டு நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது சசிகலா அரசியலில் இருந்து விலகிவிட்டதாக ஊடகங்களுக்கு அறிக்கை விட்டிருந்தார். அந்த செய்தி பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியானது. அதனால், இந்த கேள்விக்கு கருத்து சொல்ல வாய்ப்பே இல்லை. இருந்தாலும் ஊடகங்களும், பத்திரிகைகளும் சொல்கிறீர்கள். அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்களுடன் தொடர்புகொண்டு பேசுகிறார். வேறொன்றுமில்லை என்று கூறினார்.
சசிகலா அதிமுக தொண்டர்களிடமும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு எந்த ஆதாரம் இருக்கிறது சொல்லுங்கள் என்று திரும்ப கேள்வி எழுப்பினார். மேலும், சசிகலா வேண்டுமென்றே ஒரு குழப்பத்தை விளைவிப்பதற்காக திட்டமிட்டு இப்படி ஆடியோவெல்லாம் வெளியிட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்துகொண்டிருக்கிறது. இதில் சில பேர் குழப்பம் விளைக்க முயற்சி செய்தால் அது ஒருபோதும் நடக்காது என்று பழனிசாமி கூறினார்.
அதிமுகவில் இன்னும் கொறடா அறிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி “அவருடைய வீடு கிரகப்பிரவேசம். பால் காய்ச்சிக்கொண்டிருக்கிறார். இன்றைக்கு நல்ல நாள் என்று நான் வந்திருக்கிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஒன்றும் இல்லை. பக்கத்தில் இருப்பவர்கள் வந்திருக்கிறார்கள். வேறு எந்த நிர்வாகிகளும் வரவில்லை. இன்றைக்கு நல்ல நாள் அதனால், முதன் முதலில் தலைமை அலுவலகத்துக்கு வந்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.