எடப்பாடிக்கு எதிராக பாஜக குரல்: ‘மோடி வழியில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்க வேண்டும்’

மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை என்பதால் முற்றாக இதை முதல்வர் நிராகரிப்பாரா? கூட்டணி முகாம்களில் இருந்தும் குரல் கிளம்புவதால் பரிசீலிப்பாரா?

By: Updated: April 18, 2020, 07:22:15 PM

Edappadi K Palaniswami Latest Tamil News: கொரோனா நிவாரணப் பணிகளில் ஆரம்பத்தில் இருந்து பாசிட்டிவான ரீயாக்‌ஷன்களையே எதிர்கொண்டு வந்த தமிழக அரசு, இப்போது நெகடிவ்வான எதிர்வினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த எதிர்வினை, கூட்டணி முகாம்களில் இருந்தும் வருவதுதான் வியப்பு!

கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி.யும், பாஜக நிர்வாகிகளில் ஒருவருமான நரசிம்மன் இது தொடர்பாக தனது கருத்துகளை பகிர்ந்தார். ‘கொரோனா போன்ற நோய் தொற்று காலங்களில் அரசியலைக் கடந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்யும் பல அரசியல்களில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அதேசமயம், கொரோனா ஒழிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த வேண்டும் என்பது எங்களுக்கு உடன்பாடானதே!

‘மு.க.ஸ்டாலின் என்ன டாக்டரா?’ என்கிற ரீதியில் இந்த விஷயத்தில் முதல்வர் கேள்வி எழுப்புவது தவறானது. மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நோய்க்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது பற்றி முதல்வர் ஆலோசிக்க வேண்டியதில்லை. அதேசமயம் தமிழக மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து, அரசுக்கு எடுத்துச் சொல்லும் உரிமை எதிர்க்கட்சித் தலைவருக்கு உண்டு.


எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, அனைத்துக் கட்சித் தலைவர்களும் மக்களின் துயர்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழியில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தொலைபேசி அல்லது வீடியோ கான்ஃபரன்சில் தொடர்பு கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த வேண்டும்.

அதன் மூலம்தான் உண்மையான கள நிலவரத்தை அவர் உணர்ந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, சுற்றி இருப்பவர்களிடம் கேட்டால், ‘மாதம் மும்மாரி பொழிகிறது மன்னா’ என்கிற விதமாகவே கருத்து சொல்வார்கள். இந்தக் கோரிக்கையை ஏற்பது முதல்வருக்கும், அவரது அரசுக்கும், அவரது கட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது’ என்றார் நரசிம்மன்.

பாட்டாளி மக்கள் கட்சி இதே குரலை வெளிப்படையாக எழுப்பாவிட்டாலும், அந்த முகாமிலும் இதே ஆதங்கம் எதிரொலிக்கிறது. அந்தக் கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான அன்புமணி ராமதாஸை சர்வதேச சேனல்கள் அழைத்து கொரோனா ஒழிப்பு தொடர்பாக கருத்துகளை கேட்கின்றன. பாரதப் பிரதமர் ஒன்றுக்கு இருமுறை பேசுகிறார்.

பாஜக நிர்வாகிகளுடன் முன்னாள் எம்பி நரசிம்மன்

பொது முடக்கம் வேண்டும் என்கிற வலியுறுத்தலை இந்தியாவின் முதலில் முன்வைத்தவர் மருத்துவர் அன்புமணிதான். இந்தியா முழுமைக்குமே அவரிடம் பிரதமர் ஆலோசனை கேட்கையில், தமிழக முதல்வர் இது தொடர்பாக அவரை ஆலோசித்திருக்க வேண்டும். எனினும் கூட்டணி தர்மத்தை பின்பற்றி இதை சர்ச்சையாக்காமல், அறிக்கைகள் மூலமாக எங்கள் கருத்தை தெரிவித்து வருகிறோம்’ என்றார் அவர்.

தேமுதிக தரப்பிலும் இதே போன்ற அதிருப்திகள் பறிமாறப்படுகின்றன. மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை என்பதால் முற்றாக இதை முதல்வர் நிராகரிப்பாரா? கூட்டணி முகாம்களில் இருந்தும் குரல் கிளம்புவதால் பரிசீலிப்பாரா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரலாம்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Edappadi k palaniswami tamil nadu news bjp seeks coronavirus all party meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X