முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று முன் தினம் அதிரடி சோதனை நடத்தினர். முந்தைய அதிமுக அரசில் அமைச்சர்களாக பதவி வகித்த அமைச்சர்களின் வீடுகளில் மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் என்று லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. 6வது முன்னாள் அமைச்சராக கே.பி.அன்பழகன் சிக்கியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு, அவர் தொடர்புடைய இடங்கள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. இதில், இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2.87 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6.6 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கே.பி அன்பழகன் மீதும் , அவரின் குடும்பத்தினர், உறவினர் மீதும் சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திய பிறகு, எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவு திடீரென கே.பி. அன்பழகன் வீட்டுகு சென்றுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், காளிமங்களம் அருகே உள்ள கே.பி. அன்பழகன் வீட்டிற்கு திடீர் விசிட் செய்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ஏற்கெனவே, லஞ்ச ஒழிப்புத் துறையால் ரெய்டு நடத்தப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியும் உடன் இருந்துள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீட்டுக்கு திடீரென இ.பி.எஸ் வருவதை அறிந்த அதிமுகவினர் உடனடியாக அமைச்சர் வீட்டு அருகே கூடியுள்ளனர். அதிமுக நிர்வாகிகள் சிலர், அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டுக்கு வந்து லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு குறித்து ஆலோசனை நடத்தினர்.
கே.பி. அன்பழகன் வீட்டுக்கு வந்த இ.பி.எஸ் அங்கே 40 நிமிடங்கள் இருந்தார். அப்போது ரெய்டு குறித்தும் வழக்கு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் ஆலோசனை முடிந்த பிறகு இ.பி.எஸ் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"