தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக ஏப்ரல் 26-ம் தேதி டெல்லி செல்கிறார். அப்போது, இ.பி.எஸ் தி.மு.க மீதான புகார்களை அமித்ஷாவிடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த சில நாட்களுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்களுடன் டெல்லி சென்று ஏப்ரல் 26-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்தனர். அதே போல, இந்த முறை தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்கள் மற்றும் லோக் சபா தேர்தல் உட்பட பல பிரச்னைகள் குறித்து, எடப்பாடி பழனிசாமி விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின்போது, தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் பட்டியலை இ.பி.எஸ் முன்வைக்க வாய்ப்புள்ளது என்றும் ஊழல் நடவடிக்கைகளில் அதிகாரிகளின் தீவிர ஈடுபாடு குறித்தும் புகார் அளிப்பார். மாநிலத்தில் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவைப் பெறுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த நாள், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"